ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த 22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதனால் தூத்துக்குடியில் உச்சகட்ட பதற்றம் தொற்றியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் பலியானவர்களின் உடல்களை பெற்று அடக்கம் செய்வோம் என்றும், அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மீனவப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். இன்று (மே 28) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடிக்கு சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். தூத்துக்குடி நிலவரம் குறித்து அவர்கள் முதல்வரிடம் விளக்கினர். தொடர்ந்து அனைத்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். முடிவில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலமாக தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான LIVE UPDATES
7:15 PM : நடிகர் ரஜினிகாந்த் தனது ஆடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், ‘இந்த வெற்றி போராட்ட ஆத்மாக்களுக்கு கிடைத்த வெற்றி’ என குறிப்பிட்டார்.
7:00 PM : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடல் மூலமாக தமிழகத்தின் எதிர்கால அரசியல் தூத்துக்குடி மக்களால் மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.
6:35PM : திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. சட்டமன்றத்தில் நாளை புயல் வீசப்போவதை தெரிந்துகொண்டு, துறைமுகத்தில் எச்சரிக்கை கொடி ஏற்றுவதுபோல ஏற்றியிருக்கிறார்கள். 100 நாட்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருந்தால் 13 உயிர்கள் போயிருக்காது’ என்றார்.
6:17 PM : ஸ்டெர்லைட் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அந்த ஆலைக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.
6:00 PM : எடப்பாடி பழனிசாமி பேட்டி : ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என தூத்துக்குடி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை அடிப்படையிலும் அந்த ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
5.45 PM : ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி. முரளி ராம்பா உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு விரைந்தனர். அங்கு அந்த ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒட்டி, அந்த ஆலைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தொடங்கினர். ஆலை உள்ளே இருந்த ஊழியர்களை வெளியேற்றும் பணி நடக்கிறது.
5:30 PM : முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட 5 பக்க அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏற்கனவே தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆலையை நிரந்தரமாக மூட அரசு முடிவு செய்யப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.