தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள், 104 பேர் காயமடைந்தனர். இந்த 104 பேரில் சிலர் குண்டடிப்பட்டவர்கள், மேலும் பலர் தடியடியில் காயமடைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர்.
தற்போது 144 தடை நீக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களை அதிமுக-வை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்தார். அப்போது அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற நினைத்த அமைச்சரை மக்கள் கேள்விகளை துளைத்தெடுத்தனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய அமைச்சர், அனைவரையும் விரைவாகச் சந்தித்து வெளியேறினார்.
துப்பாக்கிச் சூட்டில், பாதிக்கப்பட்ட ஒருவர், “எங்களைச் சுட ஸ்டெர்லைட் ஆலையிடம் எவ்வளவு வாங்கினீர்கள். அந்த பணத்தில் இரண்டு மடங்கு நாங்கள் தருகிறோம். ஸ்டெர்லைட் உடனே மூட வேண்டும், பலியானவர்கள் உயிரைத் திரும்ப தர வேண்டும். முடியுமா உங்களால்?” என்று அமைச்சரிடம் கேட்டார்.
https://www.facebook.com/IETamil/videos/1727178600694328/
இதற்குத் தெளிவான பதில் கூற முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு ஆறுதலை மட்டும் கூறினார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.