முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக பொறுப்பில் இருந்து திடீரென ராஜினாமா செய்தார். அமைச்சர் கருப்பண்ணனுடன் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
பெருந்துறை எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாச்சலம், ஜெயலலிதாவின் முந்தையை ஆட்சியில் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக அடுத்தடுத்து பதவி வகித்தார். 2016-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இவர் சார்ந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆனார்.
ஈரோடு மாவட்ட அரசியலில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கும், அமைச்சர் கருப்பண்ணனுக்கும் ஒத்துப் போகவில்லை. அண்மையில் மக்களவைத் தேர்தலின்போது அமைச்சர் கருப்பண்ணன் திமுக மற்றும் அமமுக.வுக்கு உதவி செய்ததாக தோப்பு வெங்கடாச்சலம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். எனினும் தலைமை இதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தோப்பு வெங்கடாச்சலம் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘அதிமுக.வில் வகித்து வரும் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக’ குறிப்பிட்டுள்ளார். அதிமுக.வில் இருந்து விலகுவது குறித்து அவர் பரிசீலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே திங்கட்கிழமை மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் தோப்பு வெங்கடாச்சலம். எனவே சமரசம் நடைபெறுவதாக தெரிகிறது.