தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, ஏரிக்கரை பகுதியில் காவல் துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இந்த பால் பாக்கெட்டுகள் நகராட்சி பணியாளர்களால் கொட்டப்படவில்லை என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Nearly 5k milk packets found dumped in canal near Chennai amid supply shortage
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, பால் பற்றாக்குறை நிலவியது. இதற்கு மத்தியில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரத்தில் காலியாக உள்ள ஒரு கால்வாயில் சனிக்கிழமை கிட்டத்தட்ட 5,000 பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுக் கிடந்தன.
சென்னை தாம்பரம் நகரின் புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை காரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் பால் பாக்கெட்டுகள் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
வைகை நகர் விரிவாக்கம் ஏரிக்கரை பகுதியில் கால்வாயில் 5 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுக் கிடந்த இந்த சம்பவம் - உள்ளூர் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல பகுதிகளில் வசிப்பவர்கள் பால் வாங்க முடியாமல் திணறி வரும் நிலையில், இப்படி 5 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டுக் கிடப்பது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, போலீஸ் அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இந்த பால் பாக்கெட்டுகளை நகராட்சி பணியாளர்கள் கொட்டவில்லை என்று கூறினார்.
கால்வாயில் கொட்டப்பட்டுக் கிடந்த பால் பாக்கெட்டுகள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நிறுவனமான ஆவின் பாக்கெட்டுகள் மட்டுமல்ல, மற்ற தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளும் அந்த இடத்தில் இருந்ததாக தாம்பரம் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
“இந்தப் பகுதி தாம்பர்ம மாநகராட்சியில் 4-வது மண்டலத்தின் கீழ் வருகிறது. நிவாரண நடவடிக்கைகளுக்காக, சி.டி.ஓ காலனியில் உள்ள மையத்திலிருந்து நேரடியாக குடியிருப்பாளர்கள், முகாம்களுக்கு நாங்கள் வழங்கினோம், இடைநிலை முகவர்கள் இல்லை. மேலும், வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக, ஊதா நிற பாக்கெட்டுகளை மட்டுமே விநியோகிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது, ஆனால், இங்கு மற்ற வண்ணங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் ஆரோக்கியா, ஹாட்சன் போன்ற பிற நிறுவன பிராண்டுகள் பால் பாக்கெட்டுகளும் காணப்பட்டன. இந்த பால் பாக்கெட்டுகளில் டிசம்பர் 4 காலாவதி தேதியாக குறிப்பிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது” என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டார்.
தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் காரணமாக பல பகுதிகளில் டிசம்பர் 4-ம் தேதி கனமழை பெய்ததால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. பல சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் டிசம்பர் 4-ம் தேதி மூடப்பட்டன. மேலும், தங்கள் வசம் உள்ள பால் பாக்கெட்டுகளை விற்க முடியாத விற்பனையாளர்கள் கால்வாயில் கொட்டியிருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளது.
அங்கே இந்த பால் பாக்கெட்டுகள் மட்டுமல்லாமல், ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளும் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் பேசிய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, இது தொடர்பாக சி.சி.டிவி காட்சிகள் மூலம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றார். “நான் தாம்பரம் காவல் உதவி ஆணையருடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தேன். கடந்த இரண்டு நாட்களாகவே இதுபோன்ற பொருட்கள் இங்கு கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் எங்களிடம் தெரிவித்தனர்” என்று கூறினார்.
மேலும், “மருத்துவக் கழிவுகளை கொட்டுவது தொடர்பான புகார்களை நாங்கள் பரிசீலிப்போம், ஏனெனில், அது தண்டனைக்குரிய் குற்றம். அத்தகைய மருத்துவக் கழிவுகள் உயிரியல் மருத்துவ கழிவு மேலாண்மை நடைமுறைகளின்படி சுத்திகரிக்கப்பட வேண்டும். இது தனியார் நிலம். நாங்கள் நில உரிமையாளரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் , இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இங்கு நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு அந்த நபருக்கு அறிவுறுத்துவோம்” என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“