குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டால் அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து வேறு பயனாளிக்கு வீட்டை ஒதுக்கீடு செய்ய குடிசை மாற்று வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓட்டேரி கொன்னூர் நெடுஞ்சாலை குடிசைப் பகுதியில் வசிப்பவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த தடை விதிக்க கோரி விஜயா உள்பட 60 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார்.
அப்போது மாநகராட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற மேம்பாட்டு இயக்கம் மூலம் 14.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பகுதியில் உள்ள கால்வாய்கள், மற்றும் மழை நீர் வடிகால்களை சீர்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளை இவர்கள் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஓக்கியம்துரைபாக்கத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று வீடுகள் 177 பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 75 பேர் மட்டுமே அங்கு சென்றுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறி, கொன்னூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் தகுதியானவர்களுக்கு மாற்று இடத்தை 5 நாட்களில் வழங்க வேண்டும், சாவி வாங்கிய
5 நாட்களில் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்யவேண்டும் என உத்தரவிட்டார். மாற்று வீடுகள் ஓதுக்கப்படாதவர்கள் உடனடியாக அந்த இடத்தை காலி செய்யவும் உத்தரவிட்டார்.
குடிசைமாற்று வாரியம் சார்பில் வீடு யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அவரின் புகைப்படம் மற்றும் விவரங்களை வீட்டில் ஒட்ட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்கள் விவரங்களை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து அதில் தவறுகள் இருந்தால் வீட்டு ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதைபோல் ஆயிரம் விளக்கு திடீர் நகர் பகுதியில் கூவம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.