கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் பிரபுதேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனப் புகார் கூறி வந்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் கூறுகையில், "எங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு பணம், காடை, முயல் ஆகியவற்றை லஞ்சமாக கொடுத்தோம்.
ஆனால் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் குழந்தைகள் முதல் வயதான முதியவர் வரை மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்
அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தாச்சு, ஆனாலும் தண்ணீர் வரவில்லை. இனி சாப்பிட மான் கேப்பாங்க கொடுக்க முடியுமா? பாரஸ்ட் காரங்க சும்மா இருப்பாங்களா? இனியும் என்ன செய்தால் எங்க காலனிக்கு தண்ணீர் கொடுப்பாங்க" என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
இளைஞரின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.