பாதுகாப்பு தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் டெல்லிக்கு எடுத்து செல்வதற்கு முன்பு, சூலூரில் இன்று மாலை ஏராளமான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் 13 பேர் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இவர்களின் உடல் வெலிங்டன் பகுதியில் இருந்து சாலை மார்க்கமாக கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே இருந்து அவர்களின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
சூலூர் விமானப்படை தளத்தில் பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு முப்படைகளின் சார்பில் மரியாதை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடலைக் காணவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் குழந்தைகள் என 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூலூரில் குவிந்தனர். சூலூரில் ஆயிரக் கனக்கான பொதுமக்கள் சாலையின் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்று அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் பலரும் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று ஊடகங்களில் தெரிவித்தனர்.
பாதுகாப்பு தலைமைத் தளபதி மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேரின் உடல்களுக்கு சூலூர் விமானப்படை தளத்தில் முப்படைகளின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், விமானம் வழியாக டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பாதுகாப்பு தலைமைத் தளபதி மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக் கணக்கில் சூலூர் பகுதியில் குவிந்தது உருக்கமானதாக அமைந்திருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”