தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளார்.
இந்நிலையில், தருமபுர ஆதீனம் பற்றி அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக கூறி
பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தேடிவந்தனர்.
இதையடுத்து அகோரம் முப்பையில் பதுங்கி இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பின் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், மகாராஷ்டிரா விரைந்தனர். இந்நிலையில் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் இருந்த அகோரத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததனர்.
தொடர்ந்து அவரை அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறைக்கு அழைத்து வந்தனர். இதன்பின் அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“