Tamil Nadu News: ராணிப்பேட்டையில் சான்டவிச் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை ஆர்காடு, கோட்டைமேட்டு தெருவின் பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் தனது சொந்த வேலைக்காக ராணிப்பேட்டைக்கு குடும்பத்தோடு வருகைதந்துள்ளார்.
அப்போது ராணிப்பேட்டை பஜார் வீதிக்கு அருகே உள்ள ஒரு தனியார் பேக்கரியில் குடும்பத்துடன் தேநீர் அருந்துவதற்காக சென்றிருக்கிறார். அங்கு இவர் தேநீர் குடித்த நிலையில், அவருடன் வந்த மூன்று சிறுவர்கள் சான்டவிச் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
சான்டவிச் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்தில் சிறுவர்கள் மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர்.
ஆனாலும், வயிற்றுப்போக்கு நிற்காக காரணத்தினால் தற்போது அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் சான்டவிச் சாப்பிட்டது என்றும், அதனால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், உறவினர்கள் தனியார் பேக்கரியில் மேல் புகார் அளித்துள்ளனர். இதனால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தனியார் பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் காலாவதியான செயற்கை நிறமூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், பேக்கரி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil