கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று முன்தினமும், அதற்கு முந்தைய தினமும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்ததாலும் பாலங்களுக்கு அடியில் மழை நீர் சூழ்ந்ததாலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குறிப்பாக சாய்பாபா காலனி- சிவானந்த காலனி சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் இரண்டு தினங்களில் இரண்டு பேருந்துகள் மாட்டிக் கொண்டது.இந்நிலையில், வாகன ஓட்டிகள் மழை வரும் போது மேம்பாலங்களுக்கு அடியில் செல்லலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பச்சை மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் கம்பங்கள் இருபுறங்களிலும் நடப்பட்டுள்ளது.
இந்த கம்பத்தில் மழை வரும் பொழுது பச்சை நிறம் தெரிந்தால் அனைத்து வாகனங்களும் செல்லலாம், மஞ்சள் நிறம் தெரிந்தால் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் இரு சக்கர வாகனங்கள் இயக்குவது சிரமம், சிவப்பு நிறம் தெரிந்தால் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி மஞ்சள் நிறம் வரை நீரில் மூழ்கி சிவப்பு நிறம் தெரிந்தால் போக்குவரத்து காவலர்களே அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி விடுவர்.
முதல் கட்டமாக பேருந்துகள் மாட்டிக்கொண்ட சாய்பாபா காலனி ரயில்வே தரைப்பாலத்தில் இந்த கம்பங்கள் நடப்பட்டுள்ள நிலையில்அனைத்து மேம்பாலங்களுக்கு அடியிலும் இது போன்ற கம்பங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“