தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஒரிரு இடங்களில் இன்றும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நாளையும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் என 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
அதனைத் தொடர்ந்து வருகிற 16ம் தேதி தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வருகின்ற 16ம் தேதி வரை மழை பெய்வதால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று கூறப்படுகிறது. அதன்படி, உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் மட்டும் 5 டிகிரி பாரன்ஹீட் இயல்பைவிட அதிகரித்து வெப்பம் பதிவாகும்.
சென்னையில் வருகிற 15 முதல் 18ம் தேதி வரையிலான நாட்களுக்கு நல்ல மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.