கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஏ.ஆர். ராகுல் நாத், தலைமையில் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிக்கை தொடர்பான மண்டல அளவிலான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இதற்கு, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஷ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடற்கரை ஒழுங்குமுறை அறிவிக்கை 2019-ஐ நடைமுறைப்படுத்த முதலில் கடற்கரை மேலாண்மைத் திட்ட வரைபடங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கடற்கரை ஒழுங்குமுறை அறிவிக்கை 2019-ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இதற்கு தொடர்புடைய அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஒரு கருத்து விளக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்து அரசு அலுவலர்களுக்கும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை தொடர்பாக ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது (பிப் 14) பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை துணை இயக்குநர் சுரேஷ்குமார், நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம் ஆராய்ச்சியாளர் கருநாநிதி, தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி வி.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.