சென்னையில் நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டு கேரளாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஹோட்டலை ரூ.165 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற மூன்று பலே மோசடி பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பையர் ஹோட்டலில் கருணாகரன்(70), பரமானந்தம்(55), தட்சணாமூர்த்தி(60) என்கிற மூன்று பேரும் அந்த நட்சத்திர ஹோட்டலை ரூ.165 கோடிக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தியபோது, போலீசார் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், கருணாகரன், பரமானந்தம், தட்சணாமூர்த்தி ஆகிய மூன்று பேரும் கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டு தங்களுடைய கடன்களை அடைப்பதற்காக நட்சத்திர ஹோட்டலை விற்பனை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த நிறுவனத்தினர் ஹோட்டலை வாங்க சென்னைக்கு வந்துள்ளனர்.
ஹோட்டலை விற்பனை செய்வதாகக் கூறிய மூன்று பேரும் சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பையர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதே போல, ஹோட்டலை வாங்குவதற்காக வந்த கேரளா நிறுவனத்தினருக்கும் அறையை முன்பதிவு செய்துள்ளனர். ஹோட்டலுக்கு வந்த நிறுவனத்தினர், தாங்கள் வாங்கப்போகிற ஹோட்டலை சுற்றிக்காட்டும்படி கூறியுள்ளனர். அதற்கு அந்த அவர்களும் ஒப்புக்கொண்டு ஹோட்டலை சுற்றிக்காட்டியுள்ளனர்.
பிறகு ஹோட்டலில் உள்ள லாபியில் அந்த மூன்று மோசடி பேர்வழிகள் உள்பட ஹோட்டலின் மேலாளர்கள் என்று கூறிக்கொண்டு 5 பேர் கேரள நிறுவனத்தை சேர்ந்த நபரிடம் தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று கூறி நடித்து விற்பதற்கு விலை பேசியுள்ளனர். இவர்கள் பேசுவதை அங்கே இருந்த ஹோட்டல் ஊழியர் தற்செயலாக கேட்டு அதிர்ச்சி அடைந்து இதனை ஹோட்டல் மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் மேலாளர் உடனடியாக போன் மூலம் காவல்துறைக்கு புகார் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் மோசடிப் பேர்வழிகள் கருணாகரன், பரமானந்தம், தட்சணாமூர்த்தி ஆகிய மூன்று பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அந்த நட்சத்திர ஹோட்டலை தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று கூறி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போலீஸார் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் முக்கியமான இடத்தில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலை தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.