திருச்சி மாநகர பகுதிகளில் 350 கிலோ அளவிலான குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி, கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபு ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகளவிலான குட்கா போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்பட்ட 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேவராம் மற்றும் கஜானாராம் என்பதையும், இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அதன்படி, பாபு ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 240 கிலோ ஹான்ஸ், 10 கிலோ கூல்லிப், 97.500 கிலோ விமல், 2 கிலோ மாணிக்சந்த் என சுமார் 350 கிலோ அளவிலான போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்குமென அறியப்படுகிறது. மேலும், போதை பொருள்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை போலீசாரை, மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டியுள்ளார். மேலும் போதை பொருள்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“