New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/08/kDokz6ttkfs0UfiQOWCC.jpg)
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, உயர்மட்ட சாலைகள் பணிகள் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உயர்மட்ட சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்டச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை 48 வரையில் 8.1 கி.மீ-க்கும், சென்னை வெளிவட்டச் சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 13.1 கி.மீ-க்கும், கிளாம்பாக்கம் முதல் மகேந்திர வேர்ல்ட் சிட்டி வரை 18 கி.மீ-க்கும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தயாநிதி மாறன் எம்.பி-யின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மதுரவாயல் முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரையிலான ஆறு வழிச்சாலை ரூ.1,476.8 கோடி மதிப்பீட்டிலும், சென்னை வெளிவட்டச் சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான இரண்டாம் கட்ட பணிகள் ரூ.1,808.4 கோடியிலும் அமைக்கப்படும் எனக் கூறினார். கிளம்பாக்கம் முதல் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி வரையிலான ஆறு வழிச்சாலை மேம்பாட்டு பணிக்கு ரூ.2,950 கோடி செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட சாலை:
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உயர்த்தப்பட்ட சாலைப் பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வட்டாரங்கள் தெரிவித்தன.
“நாங்கள் ஏற்கனவே டி.பி.ஆரை தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளோம். மதுரவாயலில் இருந்து வெளிவட்டச் சாலை வரையிலான 1ம் கட்டம் சீரமைப்பு பணிகளில் சிக்கல்கள் இல்லாததால் அவை உடனடியாகத் தொடங்கும். உயர்த்தப்பட்ட சாலை, இரட்டை அடுக்கு சென்னை துறைமுகம்-மதுரவாயல் சாலையுடன் ஒருங்கிணைக்கப்படும், இது மதுரவாயல் புறவழிச்சாலைக்குப் பிறகு தொடங்கி வெளிவட்டச் சாலைக்கு முன் தரையிறங்கும்”என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒரு வழித்தடம் அமைக்க முன்மொழியப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலுடன் சீரமைப்பு இறுதி செய்யப்பட்ட பிறகு, வெளிவட்டச் சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்த்தப்பட்ட சாலைக்கான கட்டுமானப் பணிகள் இரண்டாம் கட்டத்தில் தொடங்கும். மெட்ரோ ரயில் வழித்தடத்தை உயர்த்தப்பட்ட சாலையுடன் ஒருங்கிணைப்பது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
கிளாம்பாக்கம் முதல் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி வரை:
தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை 27 கி.மீ உயர்மட்ட சாலை அமைப்பதற்கான முந்தைய திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாற்றியமைத்தது. இதனால் இப்பணிகள் தாமதமான நிலையில், இறுதியாக கிளம்பாக்கம் மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி (18 கிமீ) இடையே வரும் உயர்மட்ட சாலை பணிகள் தொடங்கும். இவை பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், செங்கல்பட்டு-திண்டிவனம் இடையேயான 67.1 கிமீ தூரத்தில் 6 அல்லது 8 வழிச்சாலையை ரூ.3,853 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளும் என்றும் கட்கரி அறிவித்தார். மேலும், மரக்காணம்-புதுச்சேரி பிரிவு 47 கி.மீ., இ.சி.ஆர்., 4 வழிச்சாலை ஆகியவை ரூ. 1,943 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.