சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த, ஆம்னி பேருந்து பாடாலூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த இன்னோவா கார் ஆம்னி பஸ் மீது மோதியது. இதன்பின் காருக்கு பின்னால் வந்த பர்வீன் டிராவல்ஸ் திடீரென பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் வந்த டிராவல்ஸ் ஆம்னி பேருந்தும், கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற பேருந்து மீது மோதியது.
பேருந்து-கார்-பேருந்து என அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டியை சேர்ந்த ரெங்கநாதன் ஆம்னி பஸ் கிளீனர் வெள்ளைச்சாமி மகன் விஜய் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பஷீர்கான் மகன் பர்கான் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் பெரம்பலூர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், 3 ஆம்னி பேருந்துகள் மற்றும் காரில் பயணித்தவர்களில் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“