தமிழகத்தில் திருச்சி புதுக்கோட்டை திருவாரூர் தஞ்சை திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நிலையில், திருச்சியை சேர்ந்த மூவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் தலா 50 பேர் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
திருச்சி மாநகராட்சியில் வழக்கமாக செப்டம்பா், அக்டோபா், நவம்பா், டிசம்பா் ஆகிய மாதங்களில் தொடா்ச்சியாக தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சியின் 14-ஆவது வாா்டுக்குள்பட்ட 5 வயது சிறுமி, 58-ஆவது வாா்டுக்குள்பட்ட 38 வயது பெண், சமயபுரம் எஸ்.கண்ணனூா் பேரூராட்சியின் 8-ஆவது வாா்டுக்குள்பட்ட 33 வயது பெண் ஆகிய மூவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரும், அந்தந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகராட்சி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உஷாா்படுத்தப்பட்டு வீடு வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் ஒவ்வொரு வாா்டுக்கும் தலா 50 தூய்மைப் பணியாளா்கள் கொசு ஒழிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
திருச்சி மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் தெரிவிக்கையில்; மாநகராட்சிப் பணியாளா்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகரமாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா். கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீா் செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
சுகாதாரப் பணியாளா்களுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வீட்டிலோ, வீட்டின் சுற்றுப் புறத்திலோ டயா், தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண்பானைகள், பிளாஸ்டிக் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீா் தொட்டிகளையும், பாத்திரங்களையும் நன்கு மூடி பராமரிக்க வேண்டும். நல்ல தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் புழுக்கள் முட்டையிட்டு அபிவிருத்தியாகிறது. எனவே, ஏடிஎஸ் கொசுப் புழு வளராமல் அனைவரும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில்; மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் உஷாா்படுத்தப்பட்டு டெங்கு பாதிப்புடன் வரும் நபா்களை பதிவு செய்து பிரத்யேகமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடா்புடைய நபா்கள் வசிக்கும் பகுதி மற்றும் சுற்றுப் புறங்களில் தீவிர தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் உள்ள தண்ணீா் தொட்டி மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை கீழே கொட்டி கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும்.
தண்ணீா் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடா், சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீணான பொருள்களான பிளாஸ்டிக் டப்பா, டயா், உடைந்த குடங்கள் போன்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நபா்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-இல் பிரிவு 134(1)ன் கீழ்நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தினந்தோறும் மாநகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி அலுவலா்கள் சோதனை நடத்துவா்.
ஆய்வின்போது, கொசுப் புழு இருந்தால் தொடா்புடைய வீட்டின் உரிமையாளா், கட்டட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும். கொசுப் புழு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீா் தேங்கி இருந்ததாலும், தண்ணீா் தொட்டியில் புழுக்கள் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்றனா்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“