சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே அரசுப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கணவாய்ப்புதூர் ஊராட்சியில் உள்ள கே.மேரூர் அரசுப்பள்ளியில் சமையலராக பணியாற்றும் ஜோதி என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இவர் சமைத்தால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என பள்ளியின் தலைமையாசிரியர் சேகரிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தீண்டாமை கொடுமை வெளியில் தெரியவந்ததும், ஜோதிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதுதொடர்பாக, பெற்றோர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட அதே ஊரைச்சேர்ந்த 6 பேர் மீது எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தேவன், சின்னத்தம்பி, மகேந்திரன் ஆகிய மூன்று பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.