சென்னையில் இன்று (நவ 30) ஒரே நாளில் மின்சாரம் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையின் தாக்கத்தால் சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்கால் - மகாபலிபுரம் இடையே மாலை 5:30 மணியளவில் ஃபீஞ்சல் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் போது, 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று சென்னையில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை முத்தியால்பேட்டையில் ஏ.டி.எம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநிலத்தை சேர்ந்த சந்தன் என்பவர் உயிரிழந்தார்.
மேலும், வேளச்சேரியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல், வியாசர்பாடி பகுதியிலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கணேசபுரம் சுரங்கப்பாதை மோட்டார் அறையில் மின்சாரம் தாக்கி இசைவாணன் என்பவர் உயிரிழந்தார். தண்ணீரை வெளியேற்றும் பணியின் போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“