தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே 9 வயது சிறுவனை தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 8ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள் மற்றும், 9ம் வகுப்பு ஒரு சிறுவன் உள்பட மூன்று பேர், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக பயன்படுத்திய மொபைல் போன்களில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளனர். அந்த வீடியோக்களை சிறுவனிடம் காட்டி, அதேபோல செய்யும்படி, சிறுவனை கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன், 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அப்போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, மூன்று சிறுவர்களும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு திருநெல்வேலியில் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனும், துஷ்பிரயோகம் செய்தவர்களும் பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்களாக பழகி வந்தனர். பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் மகன் தனியார் பள்ளியிலும், துஷ்பிரயோகம் செய்தவர்கள் வேறு பள்ளியிலும் படித்தனர். சிறுவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டதால் மொபைல் போன்களை வைத்திருந்தனர்.
சிறுவர்கள் மூவரும், தங்கள் நண்பன் வீடுகளில் ஒன்றாக அமர்ந்து ஆன்லைன் கேம் விளையாடுவார்கள். அப்படி ஒரு சந்தர்ப்பத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் தங்கள் தொலைபேசிகளில் உள்ள ஆபாச வீடியோக்களை காட்டி, சிறுவனை அதைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினர். மேலும் துஷ்பிரயோகம் செய்வதற்காக உள்ளூரில் பயன்படுத்தப்படாத ஒரு தெருவுக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர்.
இதனால் சிறுவன் தனது முன்னாள் நண்பர்களுக்கு பயந்து, பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளான். இது ஒன்றரை மாதங்களாக தொடர்ந்தது" என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன், ஜன., 6ல் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜனவரி, 15ம் தேதி வரை அங்கு சிகிச்சை பெற்று வந்தான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர், தெரியாத சில காரணங்களுக்காக சிறுவன் அதிர்ச்சியில் இருப்பதாக அவனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
சிறுவனை சமாதானப்படுத்தவும், அவன் எதனால் அதிர்ச்சியில் இருக்கிறான் என்பதை அறியவும், அப்போதுதான் அதிலிருந்து வெளியேற உதவி பெற முடியும் என மருத்துவர் பெற்றோரை அறிவுறுத்தினார்.
அப்போது தான் பெற்றோர் பலமுறை இதுகுறித்து விசாரித்தபிறகு, சிறுவன் நடந்த விவரத்தை தனது தாயிடம் கூறியுள்ளான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கோவில்பட்டி கிழக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில், மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனை அதிர்ச்சியில் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
(உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையைப் பாதுகாக்க சிறுவனின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“