இ.பி.எஸ். அணிக்கு தாவிய 3 எம்.பி.க்கள்! கலக்கத்தில் டிடிவி தினகரன்!

தினகரன் அணியில் இருந்து எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளனர்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு ஊர்வலம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது, தினகரன் அணியில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரை தினகரனுக்கு ஆதரவளித்து வந்த இவர்கள், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இவர்கள் மூவரும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் தமிழ்மகன் உசேன் கூறுகையில், ” டிடிவி ஆதரவு எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் எங்கள் அணிக்கு வந்தது கூடுதல் பலம்” என்று தெரிவித்துள்ளார்.

இரட்டை சிலை சின்னத்தை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். கூட்டணி கைப்பற்றிய பிறகு, தினகரனின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அணி மாறுவார்கள் என பரவலாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் மூவரும் இன்று முதல்வரை சந்தித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து முதல்வரை சந்தித்த பின் பேட்டியளித்த எம்.பி.விஜிலா சத்யானந்த், ” இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ, அங்கு தான் நான் இருப்பேன்” என்றார். அதன்பின் பேசிய எம்.பி. கோகுல கிருஷ்ணன், “இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ, அங்கு தான் நானும் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தினகரன் ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியிருப்பது உறுதியாகியுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Three ttv dhinakaran support mps met cm edappadi palanisamy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com