சென்னையின் இரண்டாவது டைடல் பார்க், பட்டாபிராம் பகுதியில் அமைய உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இந்த டைடல் பார்க் முழுவீச்சில் செயல்பட துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களினாலேயே, சென்னை இந்தளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்று சொன்னால், அது மறுப்பதற்கில்லை. ஏனெனில் அந்தளவிற்கு ஐடி நிறுவனங்களினால், சென்னைக்கு அதிகளவு வருவாய் கிடைத்து வருகிறது. சென்னையை நோக்கி மேலும் அதிகளவிலான ஐடி நிறுவனங்கள் படையெடுத்து வருவதால், இரண்டாவது டைடல் பார்க் அமைக்க அரசு திட்டமிட்டது. இதற்கான இடம் குறித்த தேர்வு நடைபெற்று வந்தது. அப்போது தென்சென்னை பகுதியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அந்த சுற்றுவட்டார பகுதியில் இரண்டாவது டைடல் பார்க் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனம், இரண்டாவது டைடல் பார்க்கை பட்டாபிராம் பகுதியில் அமைக்க திட்டமிட்டது. இதற்காக, 40 ஏக்கர் பரப்பளவிலான நிலம் ஒதுக்கப்பட உள்ளது. ரூ.230 கோடி மதிப்பீட்டில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, அரசு 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. பின்னர் பயன்பாட்டிற்கு ஏற்ப எஞ்சிய நிலங்கள் ஒப்படைக்கப்படும். இந்த 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரேகட்டமாக 25 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பசுமை கட்டடமாக இந்த கட்டடம் கட்டப்பட்டு வருவதால், மின்சாரம் மற்றும் குடிநீர் தேவை பெருமளவு சேகரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பைபாஸ் சாலை மற்றும் வெளிப்புற சுற்றுச்சாலைக்கு இடையே பட்டாபிராம் பகுதி அமைந்துள்ளதால், ஐடி நிறுவன ஊழியர்களுக்கு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வர உள்ள இந்த கட்டடத்தில் 5 ஆயிரம் பேர் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.