2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
MSME-களுக்கு ரூ.25 லட்சம் கோடி வங்கிக் கடன்!
10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.25 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு...
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும். மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
கோவை சூலூர் மற்றும் பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். ரூ.366 கோடி செலவில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டிகள் அமைக்கப்படும். இதன்மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
1.காஞ்சிபுரம் - திருமுடிவாக்கம்
2. விழுப்புரம் - சாரம், நாயக்கனூர்
3. கரூர் - நாகம்பள்ளி
4. திருச்சி- சூரியூர்
5. மதுரை - கருத்தபுளியம்பட்டி
6. ராமநாதபுரம் - தனிச்சியம்
7. தஞ்சாவூர் - நடுவூர்
8. நெல்லை - நரசிங்கநல்லூர்
மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா ரூ.250 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதன்மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழில் பூங்கா அமைக்கப்படும்.250 ஏக்கரில் உருவாக்கப்படும்; 5000 வேலைவாய்ப்புகள் இதன்மூலம் கிடைக்கும்.
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும். விருதுநகரில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் ரூ.77 கோடியில் அமைக்கப்படும்.
தென் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ.70 கோடி செலவில் 52 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும். விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்கு தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடியும், வியன் திறன்மிகு மையம் அமைக்க ரூ.50 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.