கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே முள்ளம்பன்றி தாக்கிய ஆவேசத்தில் ஓடிய புலி காக்கச்சல் பகுதியில் ரப்பர் தோட்டத்தில் பால் வெட்டிகொண்டிருந்த தொழிலாளி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கிவிட்டு அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்து உயிரிழந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காக்கச்சல் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயம் அருகில் இன்று காலை திடீரென புலி ஓன்று ஆவேசமான ஓடி வந்து, அப்பகுதி ரப்பர் தோட்டத்தில் பால் வெட்டிகொண்டிருந்த திருநந்திகரை பகுதி திட்டவிளையைச் சேர்ந்த பூதலிங்கம் (63) என்பவரை தாக்கியது. தொடர்ந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் அன்னாசி பழத்தோட்டத்தில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த ஆண்டிபொற்றை பகுதியை சேர்ந்த ஜெயன் (28) என்பவரை தாக்கியது.
பின்னர் அந்தப் புலி அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்து உயிரிழந்தது. புலி தாக்கி படுகாயமடைந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி பூதலிங்கம் மற்றும் ஜெயன் ஆகியோரின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
படுகாயமடைந்த பூதலிங்கத்தை மேல் சிகிச்சைக்காக மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் வனத்துறையினர் தொழிலாளிகளை தாக்கி, உயிரிழந்த புலியை ஆய்வு செய்ததில் சுமார் 15 வயதுடைய பெண் புலி, முள்ளம் பன்றியை தாக்கிவிட்டு உடலில் முள்பட்டு படுகாயத்துடன் ஓடி வந்த ஆவேசத்தில் தொழிலாளியை தாக்கிவிட்டு உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவலை தெரிவித்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த புலியை மீட்டு உடற்கூறாய்வுக்காக கொண்டு சென்ற வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் முள்ளம்பன்றியை தாக்கிவிட்டு புலி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
த.இ.தாகூர்., கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“