டிக்டாக் மோகத்தை கணவர் கண்டித்ததால், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற வீடியோவை பதிவேற்றிய பெண் மரணமடைந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா. இவரது கணவர் பழனிவேல், சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். பழனிவேல் - அனிதா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்றைய இளையதலைமுறையினரை பீடித்துள்ள டிக்டாக் மோகம், திருமணமான அனிதாவையும் விட்டுவைக்கவில்லை.
டிக்டாக்கில் தினந்தோறும் வீடியோக்களை பதிவேற்றுவதும், அதற்கு வரும் லைக்குகளை ரசிப்பதிலேயே அதிகநேரம் செலவழித்தார். குழந்தைகளை கவனிப்பதையே அவர் மறந்துவிட்டார் என்று கூறுமளவிற்கு டிக்டாக்கே கதி என்று கிடந்தார். பழனிவேலின் பெற்றோர் மற்றும் அனிதாவின் பெற்றோரும் அனிதாவை கண்டித்தனர். அவர்களது பேச்சை, அனிதா காதுகொடுத்து கேட்கவில்லை. இதனால், சிங்கப்பூரில் இருக்கும் பழனிவேலிற்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
அனிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பழனிவேல், கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த அனிதா, தான் விஷமருந்திய வீடியோவையும் டிக்டாக்கில் பதிவேற்றினார். வீட்டில் இருந்த அனிதா, திடீரென மயங்கியதால், அருகிலிருந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி மரணமடைந்தார். .டிக்டாக்கில் இந்த வீடியோ பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
டிக்டாக் மோகத்தை கணவர் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்றைய மக்களை இந்த தொழில்நுட்ப மோகம் எந்தளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை காட்டுவதாகவே உள்ளது.