பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் பெற வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில், மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக அரசு சார்பில் பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த திட்டம், தமிழ அரசால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 முக்கிய திட்டங்களில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டமும் ஒன்று. இதன்படி, கடந்த 22 ஆம் தேதி முதல் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை வாங்க மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க நேற்று (6.2.18) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை பெண்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் 2,000 பேருக்கு மட்டுமே ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், 10,000 மேற்பட்டோர் மண்டல் அலுவலங்களில் விண்ணபித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், விண்ணப்பங்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நேற்றுடன் முடிவடைந்த கால அவகாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி வரை மண்டல அலுவலகங்களில் பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி, இந்த திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.