போலியான ரெம்டெசிவர் மருந்து அளிக்கப்பட்டதால் திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை அந்த மருத்துவர் இறந்து 5 நாட்களுக்குப்பிறகு நேற்று செவ்வாய்க்கிழமை அன்று தமிழக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், கோவிட் சிகிச்சை நெறிமுறையை மீறியதற்காகவும், போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ததற்காகவும், அந்த மருத்துவர் சிகிச்சை பெற்ற திண்டிவனத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை அன்று நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மருத்துவமனையில் வழங்கப்பட்ட போலி ரெம்டெசிவிர் மருந்து நோயாளியின் உயிரை பறித்துவிட்டதாக இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த மருந்தை பரிந்துரைத்த மருத்துவரை கைது செய்ய காவல்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். புதுச்சேரி மற்றும் ஐ-மெட் சூப்பர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து இந்த மருத்துவமனைக்கு போலி மருந்து கிடைத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவர். ராமனுக்கு போலியான மருந்து வழங்கியதால்தான் அவர் இறந்துவிட்டார் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். இது போலியான மருந்துதான் என்று மருத்துவ குழுவும் கண்டறிந்துள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.
மேலும், டி.எம்.எஸ்ஸால் ஒரு குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஆய்வு செய்யப்பட்டது. அங்கு ஒதுக்கப்பட்டதை விட அதிக அளவு ரெம்டெசிவிர் குப்பிகளை சேமித்து வைத்தது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கான கோவிட் சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நோயாளிகளுக்கு பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக இணையதளத்தில் ரெம்டெசிவர் மருந்துக்காக பதிவு செய்துள்ள 200 மருத்துவமனைகளில் இதுவரை 71 தனியார் மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரெம்டெசிவிர் மருந்தை அதிகமாக பரிந்துரைக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்.
இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil