தி.நகரில் வாலிபரை கட்டி வைத்து, கையை உடைக்க முயன்ற டிராபிக் போலீஸ்! கனிமொழி கடும் கண்டனம்

பிரகாஷின் தாயார் சங்கீதாவை ஒரு பெண் காவலர் பிடித்து கொள்கிறார். அவர் கதறி அழுகிறார். பொது மக்கள் மத்தியில் இந்த சம்பவம் நடந்தும் யாரும்...

சென்னை தி.நகரில் வாலிபரை மூன்று டிராபிக் போலீசார் கட்டி வைத்து, அவரது கையை உடைக்க முயலும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவை அனைத்தும் வாலிபரின் தாய், தங்கையின் கண் முன்னே நடந்ததுதான் வேதனையானது.

சென்னை தி.நகர் துரைசாமி சப்-வே அருகில் எப்போதும் ஏராளமான மக்கள் ஷாப்பிங் செய்ய வருவார்கள். இந்த இடத்தில் டிராபிக் போலீசார் நின்று போக்குவரத்தை சரி செய்வார்கள். நேற்று மாலை, சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர், தனது தாய் சங்கீதா, மற்றும் சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவரை மடக்கிய போலீசார், ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டுள்ளார்.

உடன் பிரகாஷ், ‘நிறைய பொருட்கள் இருந்ததால் போட முடியவில்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார். உடன், ’ஓரே பைக்கில் மூன்று பேர் போகலாமா? வண்டியை ஓரமாக நிறுத்து’ என்று சொல்லி அவர்கள் மூவரையும் இறங்க வைத்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு போக்குவரத்து பணியில் நின்ற போலீசார், அவரை மடக்கி பிடித்து கொள்ள, இன்னொரு போலீசார் அடித்து உதைக்கிறார். பிரகாஷின் தாயார் அடிக்கவிடாமல் தடுக்கிறார். இன்னொரு போலீஸ்காரர், அந்த தாயை பெண் என்றும் பாராமல் இழுத்து தள்ளிவிடுகிறார். அவரை அடிக்கவும் செய்கிறார். போலீஸ் பிடியில் இருந்த பிரகாஷ், திமிறி தாயாரை காப்பாற்ற முயல்கிறார். உடன் மூன்று போலீசார் பிரகாஷின் கையை பிடித்து முறுக்கி உடைக்க முயல்கிறார். இன்னொரு போலீஸ்காரர் கையால் அடித்து கையை உடைக்க முயல்கிறார்.

பிரகாஷின் தாயார் சங்கீதாவை ஒரு பெண் காவலர் பிடித்து கொள்கிறார். இருந்தும் அவர் கதறி அழுகிறார். பொது மக்கள் மத்தியில் இந்த சம்பவம் நடந்தும் யாரும் இதை கேட்கவில்லை. போலீஸ் தாக்குதலுக்குள்ளான பிரகாஷின் தாயார் சங்கீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு, சென்னை திருவன்மியூரில் கால் டாக்ஸி ஓட்டிய வாலிபர் சீட் பெல்ட் போடவில்லை என பொது இடத்தில் மக்கள் மத்தியில் டிராபிக் போலீசார் திட்டினார்கள். இதையடுத்து அந்த வாலிபர் டீசலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளை விரட்டிச் சென்ற போலீசார் எட்டி உதைத்தனர். இதில் தம்பதிகள் கீழே விழுந்தனர். கர்பிணியான அந்த பெண் பரிதாபமாக இறந்தார். அந்த பரபரப்பு அடங்கும் முன்பே, தி.நகரில் வாலிபரின் கையை போலீசார் உடைக்க்க முயன்ற காட்சி சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி சில போலீசார் இருந்தாலும் மனிதாபிமானமிக்க போலீசாரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த சம்பவத்துக்கு திமுக மாநிலங்களவை எம்பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:

’’சென்னை தி.நகரில் பிரகாஷ் என்ற வாலிபரை டிராபிக் போலீசார் கம்பத்தில் கட்டி வைத்து, கையை முறிக்க முயலும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. போலீசாரின் இது போன்ற அராஜக செயல்கள் கண்டிக்கத் தக்கது. சென்னை ஓ.எம்.ஆரில் டிரைவரை போலீசார் பொதுவெளியில் அடித்ததால், மனம் உடைந்து தீக்குளித்தார். திருச்சியில் கர்பிணி பெண் என்றும் பாராமல் எட்டி உதைத்துக் கொன்றனர், டிராபிக் போலீஸ். இப்போது, தாய் கண் முன் மகனை கட்டி வைத்து அடித்துள்ளனர். ஹெல்மெட் போடவில்லை என்றால் வழக்கு போடுவதை விட்டுவிட்டு, அடித்து உதைக்க போலீசாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

×Close
×Close