திருச்சி மாநகராட்சியின் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மார்ச் 26-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று (மார்ச் 28) பட்ஜெட் விவாத கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும் போது, "பட்ஜெட்டில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மாநகராட்சி அனைத்து நிதிகளையும் ஒதுக்கி உள்ளதாக அ.தி.முக. கவுன்சிலர் அம்பிகாபதி தவறான கருத்துகளை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். எனவே, அது குறித்து பொதுமக்களுக்கு சரியான தகவலை கூற வேண்டியது என்னுடைய கடமை ஆகும்.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 492.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 140 கோடி மானியம் மற்றும் பொதுநிதி 121.29 கோடி ஆகும். இதேபோன்று குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 2.03 மதிப்பீடு தொகை கூறப்பட்டுள்ளது. அதில், ரூபாய் ஒரு கோடி மானியம், ரூ.1.03 பொது நிதி ஆகும்.
இது போன்று ஒவ்வொரு திட்டத்திற்கு சீராக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கவுன்சிலர்களுக்கும் போதிய நிதியை வழங்கிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மாநகராட்சியில் அனைத்து கவுன்சிலருக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது" எனக் கூறினார்.
அப்போது திடீரென எழுந்த அ.தி.மு.க மாமன்ற குழு எதிர்க்கட்சி தலைவர் அம்பிகாபதி, "இதில் மத்திய அரசின் நிதியும் சேர்த்து தான் இருக்கிறது. நீங்கள் மட்டும் செய்தது போல் கூறுகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, டி.வி.எஸ் டோல்கேட் என்ற பெயரை மாற்றி கலைஞர் டோல்கேட் என்று அழைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கூட்டத்தில் சுதந்திரமாக பேச முடியாத நிலை இருக்கிறது எனக் கூறி அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்