திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் நிலையில், அன்றைய தினம் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வரும் 7- ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ராஜகோபுரத்தின் அருகில் பிரம்மாண்டமாக 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில நின்று செல்லும்.
அதேபோல், 6ம் தேதி இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி வழியாக செங்கோட்டை வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் 7ம் தேதி செங்கோட்டையில் இரவு 7.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு தென்காசி, நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக எழும்பூர் செல்லும். இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி-2, மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் 18 ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/83cc36fc-e66.jpg)
இதற்கான முன்பதிவுகள் 04.07.2025 காலை 8:00 மணிக்கு தொடங்கும் எனவும், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படியும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
க.சண்முகவடிவேல்