திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் கோயிலில் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகனின் உறவினர் சிசுபாலன் யானை அருகே நீ்ண்ட நேரம் செல்ஃபி எடுத்தபோது ஆத்திரம் அடைந்த யானை அவர்களைத் தாக்கியதாக வனசரகர் கவின் விளக்கம் அளித்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று. திருச்செந்தூர் முருகன் கோயிலில், தெய்வானை (26) என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசி வழங்குவது வழக்கம். இந்த யானைக்கு, திருச்செந்தூர் வ.உ.சி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்பவர் உதவி பாகனாக இருந்தார்.
உதயகுமார் மற்றும் அவரது உறவினர் கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பழகலை சேர்ந்த கிருஷ்ண நாயர் மகன் சிசுபாலன் (58) ஆகிய இருவரும் இன்று (நவம்பர் 18) மாலை 3.10 மணியளவில் யானை அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆக்ரோஷமடைந்த தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. இதைக் கண்ட உதயகுமார் தடுக்க முயன்றுள்ளார். இதனால், இருவரையும் யானை இருவரையும் காலால் மிதித்தும் தும்பிக்கையாலும் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யானைப் பாகன் உதயகுமார், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தெய்வானை யானை திடீரென ஆக்ரோஷமாகத் தாக்கியதைப் பார்த்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் பீதியடைந்து அலறியடித்துகொண்டு ஓடினர். இதை அறிந்த யானையின் தலைமைப் பாகன் ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து யானை மீது தண்ணீரைப் பீச்சி அடித்து யானையை சாந்தப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, தெய்வானை யானை வழக்கமாக கட்டி வைக்கப்படும் கம்பி வலை போடப்பட்ட அறைக்குள் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் தலைமையில், திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் உள்ளிட்ட வனத்துறையினர், டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பொன்ராஜ், அருண் உள்ளிட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து யானையை பரிசோதனை செய்தனர்.
கோயில் யானை தாக்கியது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் கூறுகையில், “திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை அமைதியானது; பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது; தெய்வானை ஏன் இப்படி நடந்துகொண்டது என தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து, கோயில் யானை தெய்வானை திடீரென ஆக்ரோஷம் அடைந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்ய அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
கோயில் யானை தாக்கியது தொடர்பாக விளக்கம் அளித்த வனசரக அலுவலர் கவின், “பாகனின் உறவினர் சிசுபாலன் யானை தெய்வானை அருகே நீண்ட நேரம் செல்ஃபி எடுத்துள்ளார். செல்ஃபி எடுத்தபோது ஆத்திரமடைந்த யானை சிசுபாலனை கால் மற்றும் துப்பிக்கையால் தாக்கியுள்ளது; சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியுள்ளது” என்று கூறினார்.
இதற்கிடையே கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.