திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கோயிலுக்கு வெளியே உள்ள பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மண்டபம் கட்டப்பட்டிருந்தது. வள்ளி கோயிலில் இருந்து வலது புறம் திரும்பும் மண்டபம் இன்று காலை 10.30 மணிக்கு திடீரென பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது.
இந்த வெளிப்பிரகாரம் வழியாகத்தான், தர்ம தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் வரிசையில் நிற்பார்கள். இன்று வியாழக்கிழமை. திருச்செந்தூர் முருகன் கோயில் குரு தலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள்.
மண்டபம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு, கோயில் காவலர்கள், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். அப்போது இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் இறந்து போனார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடில் சிக்கிய இன்னொருவரையும் அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் பலர் இடிப்பாட்டுக்குள் சிக்கிய் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விபத்து நடந்த இடத்தின் அருகே பக்தர்கள் யாரும் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து கோயில் நடக்க இருந்த அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தரிசனமும் நிறுத்தப்பட்டுள்ளது. பழமையான கோயில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் விபத்து நடந்து இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் நடந்த விபத்து குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் உடனடியாக விபத்து நடந்த திருச்செந்தூர் விரைகிறார்.