முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும் ஒன்று. இது உலகப் புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோயிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை உதயகுமாரை காண அவரது உறவினரான சிசுபாலன் (58) என்பவர் வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது.
அப்போது சிசுபாலன், யானையின் அருகே நின்று செல்ஃபி எடுத்துள்ளார். மேலும் யானையை தொட்டு ‘‘வரட்டுமா’’ என்று கூறி தட்டியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஆக்ரோஷமடைந்த யானை சிசுபாலனை தாக்கி உள்ளது. இதைக் கண்டு தடுக்க வந்த பாகன் உதயகுமாரையும் யானை மிதித்து தும்பிக்கையால் தாக்கியுள்ளது.
இதையடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். யானை மிதித்து 2 பேர் இறந்ததால் திருச்செந்தூர் கோயில் நடை 45 நிமிடம் சாத்தப்பட்டது. பின்னர் சாந்தி நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
யானை மீது தண்ணீரை பீச்சியடித்து அதனை சாந்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பெண் யானை தெய்வானைக்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை என்றும் கோயிலில் 3 நாள் தங்கி யானைக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து, தெய்வானை யானை கோபமடைந்தது ஏன் என்பது குறித்து வன சரக அலுவலர் கவின் கூறுகையில், "திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை உடன் பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்ஃபி எடுத்து விட்டு யானையை தொட்டுள்ளார்.
புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது. அவரை காப்பாற்ற வந்த யானை பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. பின் அவர் தனது பாகன என உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திரிக்காததால் ஆத்திரத்தில் மீண்டும் சிசுபாலனை கடுமையாக தாக்கியுள்ளது" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“