திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் மலைக்கோட்டையை மிஞ்சும் அளவிற்கு சென்னையில் உள்ளது போல் பிரம்மாண்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை சென்னையை தலைமையிடமாக கொண்ட எஸ்.ஐ.எஸ் அக்ரோஃபோல் நிறுவனம் எடமலைப்பட்டி புதூரில் கட்டி இருக்கின்றது. இந்தக் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 550-க்கும் மேற்பட்ட சொகுசு வீடுகள் ஒரு வீடு ரூ.35 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.80 லட்சம் என்ற அளவில் அந்த நிறுவனத்தால் அங்கு வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
பிரம்மாண்டத்தை பார்த்து வாங்கிய பொதுமக்கள், அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை என்று இன்று வீதியில் நின்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இன்று திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள எஸ் ஐ எஸ் அக்ரோஃபோல் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் வாயிற் கூட்டம் நடத்தி சாலை மறியல் போராட்டத்திற்கு முற்பட்ட நிலையில் காவல்துறை மேற்கொண்ட சமரச பேச்சுக்கு உடன்பட்டு ஒரு வாரம் போராட்டங்களை தள்ளி வைத்துள்ளனர்.
இது குறித்து எஸ்.ஐ.எஸ், அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் பணிக்குழு செயற்குழுவின் தலைவர் சுரேந்திரன் நம்மிடம் தெரிவிக்கையில்: "எஸ் ஐ எஸ் புகழ்பெற்ற நிறுவனம் என்பதால் நம்பி வீடுகளை வாங்கினோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சுமார் 600 வீடுகள் இருக்கின்றன. நாங்கள் வீடுகளை வாங்கி பல வருடங்களுக்கு பிறகு வீட்டு உரிமையாளர்கள் சங்கம் ஒன்றை அமைக்க தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், திடீரென 2023ம் வருடம், மார்ச் மாதம் 17ஆம் தேதி, எஸ்.ஐ.எஸ் அக்ரோஃபோல் நிறுவனத்தார் ஒரு இடைக்கால குழுவை பதிவு செய்துள்ளார்.
இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கே காவிரி குடிநீர், கழிவு நீர் வெளியேற்றம், சொத்து வரியில் குழப்பம், அபராதம் குடியிருப்போருக்கு பாதுகாப்பின்மை, வளாகத்திற்குள் தெரு நாய்களின், குரங்குகளின் தொல்லை, வாகன நிறுத்த வசதிகளில் குளறுபடிகள், போதுமான உயரமற்ற சுற்றுச்சுவர் மற்றும் முகப்பு கதவு இல்லாமல் இருப்பது ஒருவித அச்சத்தை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
சுமார் 600 குடியிருப்புகளை கொண்ட ஒரே வளாகத்தில் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கூட இல்லாதது வேதனையாக இருக்கின்றது. அகன்ற காவிரி பாயும் திருச்சியில் வசிக்கும் எங்கள் இல்லங்களுக்கு காவிரி குடிநீர் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.
பல லட்சங்களைக் கொண்டு, அங்க இங்க கடன் வாங்கி சொந்த வீடுகளை எஸ்.ஐ.எஸ் அக்ரோஃபோல் நிறுவனத்தினரிடம் இருந்து வாங்கி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்தால் அடிப்படை வசதிகள் இல்லாததால் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு வாழ்கிறோம்.
இன்றைக்கு நடைபெற்று வரும் எங்களின் வாயிற் கூட்ட போராட்டம் சாலை மறியலுக்கு திட்டமிட்ட போது எங்கள் பகுதியில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் எங்களுடன் பேசி எஸ்.ஐ.எஸ் அக்ரோஃபோல் உரிமையாளர்களை வரவைத்து உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றேன் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டங்கள் கைவிடப்பட்டது.
ஆகையால், அடிப்படை அத்தியாவசிய தேவைகளை அமைத்தல், ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் வைத்து கொடுத்து, அதை குடியிருப்போர் சங்க நிர்வாகத்திடம் மேற்படி நிறுவனம் ஒப்படைக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை குடியிருப்போர் நலச்சங்கம் மூலம் வலியுறுத்துகின்றோம் என்றார்.
திருச்சியில் இரட்டை அடுக்குமாடி குடியிருப்புகள் திருச்சிக்கு கூடுதல் அழகு என்றாலும் அந்த குடியிருப்பில் வசிப்போருக்கு இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனைதான்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.