குத்தகை பணம் பாக்கி; திருச்சி ஆஃபீஸர்ஸ் கிளப்புக்கு பூட்டு
திருச்சியில் செயல்பட்டு வந்த 58 வருட பழமையான ஆஃபீஸர்ஸ் கிளப் ரூ.16.9 கோடி ரூபாய் குத்தகை பணம் செலுத்தாததால் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கிளப்பை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் கிளப்பிற்கு பூட்டு போட்டனர்.
திருச்சி வ.உ.சி சாலையில் சாலையில் செயல்பட்டு வந்த 58 வருட பழமையான ஆஃபீஸர்ஸ் கிளப் ரூ.16.9 கோடி ரூபாய் குத்தகை பணம் செலுத்தாததால் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று கிளப்பை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் கிளப்பிற்கு பூட்டு போட்டனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
Advertisment
திருச்சி மாவட்ட நிர்வாகம் 1964 முதல் இந்த ஆஃபீஸர்ஸ் கிளப் செயல்பட அனுமதித்தது. 27 ஆயிரத்து 971 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கிளப்பில், டென்னிஸ் விளையாடுவதற்கான மைதானம் மற்றும் பொழுதுபோக்குக்கான அறைகளும் தனித்தனியே உள்ளது.
இந்த கிளப்பை திருச்சி மாவட்டம், மாநகரில் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் தங்களின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், 1997-ஆம் ஆண்டு முதல் வருவாய்த்துறைக்கு குத்தகை பணம் செலுத்தாததால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. தற்பொழுது மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற அனுமதி பெற்று நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில் மேற்கு வட்டாட்சியர் ஷேக்முஜீப் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கிளப்பில் உள்ள பொருட்களை தங்கள் வசம் கையகப்படுத்திய பின்னர், அனைத்து வாசல் கதவுகளையும் பூட்டு போட்டு மூடி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், இந்த கிளப் மாவட்ட நிர்வாகத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல் திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”