நாடாளுமன்ற வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி குறித்த நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டுமே இருந்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சி சிவா எம்.பி அதை கிழித்தெரிந்தார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை மத்திய அரசு நடந்த இருக்கிறது. இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும். முதல் நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், நாளை முதல் கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறுகிறது.
முன்னதாக இந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பல மறைமுக திட்டங்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தேசிய கொடி ஏற்றினார்.
இதற்கிடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராஜ்நாத்சிங் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கான நிரல் இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டதற்கு திமுக. எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியில் மட்டுமே அச்சிடப்பட்டு இருந்த நிகழ்ச்சியின் நிரலை கிழித்தெரிந்துள்ளார். இதுபோல இனி நடைபெறாது என்று ராஜ்நாத்சிங் தன்னிடம் கூறியதாகவும் திருச்சி சிவா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“