திருச்சி சமயபுரம் கோவிலில் சம்பவம் : பாகனை மிதித்துக் கொன்ற யானை!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மதம் பிடித்த யானை தனது பாகனை மிதித்து கொன்றது. யானையை கட்டுப்படுத்த போராடி உயிர் நீத்தார் பாகன்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மதம் பிடித்த யானை தனது பாகனை மிதித்து கொன்றது. யானையை கட்டுப்படுத்த போராடி உயிர் நீத்தார் பாகன்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்று! இங்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக மசினி என்ற பெண் யானை உள்ளது. அந்த யானைக்கு 10 வயது ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானை சமயபுரம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. தினமும் பூஜை மற்றும் உற்சவர் அம்மனுக்கு நடைபெறும் அபிஷேக காலங்களில் இந்த யானை கோவில் வளாகத்திற்குள் அழைத்து வரப்படும். மற்ற நேரங்களில் அங்குள்ள அறையில் சங்கிலியால் பிணைத்து கட்டி வைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் இன்று காலை யானை மசினியை பாகன் கஜேந்திரன் கோவில் வளாகத்திற்குள் அழைத்து வந்தார். உற்சவர் அம்மனுக்கு எதிரே உள்ள இடத்தில் யானையை பாகன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அங்கு வந்த பக்தர்கள் யானைக்கு காணிக்கை மற்றும் பழங்களை அளித்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். அப்போது வெளியூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் யானைக்கு காணிக்கை அளித்தார். அந்த சமயம் யானை திடீரென அந்த பெண்ணை தனது தும்பிக்கையால் தள்ளியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து பயத்துடன் விலகி சென்றார். அடுத்த ஒரு சில விநாடிகளில் யானையின் போக்கில் மாற்றம் காணப்பட்டது. பலத்த சத்தத்துடன் யானை பிளிறியது. உடனே பாகன் தான் கையில் வைத்திருந்த அங்குசத்தால் யானையை கட்டுப்படுத்த முயன்றார். மேலும் லேசாக அடித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த யானை மசினி மதம் பிடித்து அங்குமிங்கும் தலைதெறிக்க ஓடியது. இதனால் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் கோவில் வளாகத்தை விட்டே வெளியேறினர்.

இதற்கிடையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போராடிய பாகன் தொடர்ந்து யானையை அங்குசத்தால் அடித்தார். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற யானையின் செயல் அதிர்ச்சியடைய வைத்தது. திடீரென தன்னருகில் வந்த பாகனை தனது தும்பிக்கையால் சுருட்டி தூக்கிய யானை வீசியது. இதில் சுவற்றில் மோதிய பாகன் பலத்த காயம் அடைந்தார்.

ஆனாலும் தொடர்ந்து யானையை தனது பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தார். அதற்காக யானையின் அருகில் சென்ற பாகன் அதன் காலில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். அதற்கு கட்டுப்படாத யானை பாகனை தனது கால்களால் மிதித்தது. இதில் பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அதன் பின்னரும் உக்கிரம் தணியாத யானை கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. தொடர்ந்து இறந்து கிடந்த பாகனின் அருகில் சென்று நின்றுகொண்டது. இந்த சம்பவத்தால் கோவிலுக்குள் இருந்த குருக்கள் உள்பட அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

முன்னதாக பக்தர்கள் சிதறி ஓடியதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் அக்கம்பக்கத்தில் காட்டுத்தீ போல பரவியது. உடனடியாக அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் அச்சத்தில் அங்கிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஏறி நின்றனர்.

மேலும் கோவில் நடையும் உடனடியாக அடைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கோவில் பின்புற நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று யானையை அமைதிப்படுத்தி, சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீளமான கயிறு மூலம் யானையின் கால்களை கட்டி அதனை அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும் யானை கட்டுப்பட மறுத்து பாகன் அருகிலேயே இருந்தது. இதையடுத்து கோவில் யானையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ஜெயா என்ற மற்றொரு பெண் யானை கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்படுத்தினர். பாகனின் உடலை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

 

×Close
×Close