Advertisment

காதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்

Tiruchi Siva 96 Movie Review: காதல் காவியமாக வெளிவந்திருக்கும் 96 என்கிற தமிழ் சினிமாவை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

author-image
WebDesk
Oct 08, 2018 19:05 IST
New Update
Tiruchi Siva 96 Movie Review, 96 Moview Review, திருச்சி சிவா, திருச்சி சிவா சினிமா விமர்சனம், 96

Tiruchi Siva 96 Movie Review, 96 Moview Review, திருச்சி சிவா, திருச்சி சிவா சினிமா விமர்சனம், 96

காதல் காவியமாக வெளிவந்திருக்கும் 96 என்கிற தமிழ் சினிமாவை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதில் கடுப்பான திமுக பேச்சாளர்கள், ‘சினிமாவை புகழ்வது இருக்கட்டும், எங்க வாழ்க்கையை படம் பிடிச்சு தலைமைக்கு காட்டுங்க’ என கொந்தளித்திருக்கிறார்கள்.

Advertisment

திருச்சி சிவா, சில பல சர்ச்சைகளுக்கு சொந்தக் காரர்! இவரது லேட்டஸ்ட் சர்ச்சை, காதல் காவியமாக வெளிவந்திருக்கும் 96 படத்துடன் சுற்றி அமைந்திருக்கிறது. இந்தப் படம் குறித்து தனது முகநூலில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் எம்.பி.யுமான திருச்சி சிவா வெளியிட்டிருக்கிறார்.

திருச்சி சிவாவின் பதிவு இதோ: ‘என்னுடைய இத்தனை வயதில் மூன்று நாட்களுக்குள் ஒரு திரைப்படத்தை இரண்டாவது முறை பார்த்திருக்கிறேன். இயக்குநர் பிரேம்குமாரின் திறமையில் வெளிவந்திருக்கும் ‘96 திரைப்படம்.

ஒரு படத்திற்கு எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையிலும் முத்திரை பதிக்கக்கூடிய தனித்துவம். இயக்கம், நடிப்பு, வசனம், கேமரா, இசை என எல்லாமே. குறைவான வசனங்கள், நடிகர்களின் யதார்த்தமான, உணர்ச்சி வெளிப்பாடுகள்(Expression). படப்பிடிப்பும், காட்சி அமைப்பும், நீண்ட தூர பேச்சில்லாத நடைகளும் கூட வசனம் இல்லாமலே நிறைய சொல்லுகின்றன.

பாத்திரங்களின் உணர்ச்சிகள் எளிதாக, இயல்பாக நம்முடையதாகின்றன. காலை 5-50 க்கு சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல வேண்டுமென்று இரவு 10 மணியளவில் கதாநாயகி சொல்கிறபோது இடைவேளை. கதைக்கு மீதமுள்ள சுமார எட்டு மணி நேர நிகழ்வுகளை இடைவேளைக்குப் பின்னால் ஒண்ணேகால் மணி நேரம் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பு இயக்குநருடையதாகிறது. (Unity of time).இதில் முழுவெற்றி பெற்று காட்டுகிறார பிரேம்குமார்.

கதாநாயகி காரிலிருந்து இறங்கி, தங்கும் விடுதியின் வரவேற்பறை முழுதும் நடந்து, லிஃப்டில் பயணித்து , வராண்டாவை கடந்து , அறைக்குள் நுழைந்து, உட்கார்ந்து, கொஞ்ச நேரம் யோசித்து இத்தனை நேரமும் வசனமே இல்லை. திரிஷாவின் முகமும், நடிப்பும், காமராவுமே பத்து பக்க வசனங்களுக்கு சமம்.

“ரொம்ப தூரம் போயிட்டியா?” என்ற ஜானுவின் கேள்விக்கு, “உன்னை விட்ட இடத்திலேயே நிற்கிறேன்” என்கிற பதில் காட்சிக்கு பொருத்தமானதாக மட்டும் இல்லாமல் இருபது வருடங்கள் இருவரின் மனதிற்குள் இருந்த கேள்வியாகவும், விடையாகவும் வெளிப்படுகின்றது.

இயல்பான நடிப்பில், யாரும் தொடமுடியாத உயரத்தில் விஜயசேதுபதி. சாவித்திரி, வைஜயந்திமாலா, தேவிகாவைப் போல உண்டா என்று பேசுபவர்களைக் கூட ஏற்றுக்கொள்ள வைக்கும் த்ரிஷாவின் இயல்பாக பலவிதமான உணர்ச்சிகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் அற்புதமான நடிப்பு.

காட்சிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உடனுக்குடன் மாறும் முகபாவம்.

இருவரின் இளவயது பாத்திரமேற்று நடிக்கும் கௌரி, ஆதித்தன் ஆகியோர் தேர்ந்த நடிகர்களைப் போல் உணர்ச்சிகளை பேசாமலே கண்களாலும், பாவங்களாலும் வெளிப்படுத்துவது இருவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. கௌரி இன்னொரு ரேவதியாக வலம் வருவார். பின்னணி இசை இல்லாமல் ஜானகியின் பாடல்களை பாடும்போது அந்த முகபாவம் அற்புதம்.

இதற்குமேல் படத்தைப் பற்றி விவரிப்பது இனி பார்க்க வருபவர்களின் ஆச்சர்யங்களையும், சிலிர்ப்பையும் குறைத்து விடும். உழைப்பிற்கும், அதன் விளைவாக உருவாகும் உன்னதமான படைப்பிற்கும் அங்கீகாரமும், பாராட்டும் தருவதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்ததன் விளைவே 96 படம் குறித்த இந்த என் பதிவு.

ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் ஏராளமான பட்டாசு சத்தமும் இல்லாமல் வெளியாகியிருக்கும் ஒரு இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் இது.  “நீ முதன்முதலாக புடவை கட்டி வந்தபோது எப்படி இருந்தாய் தெரியுமா” என்று விஜயசேதுபதி கூறுகிறபோது, “எப்படி” என்பதை ஆச்சரியமும் , எதிர்பார்ப்பும், உற்சாகமும் கலந்த முகக்குறிப்பால் த்ரிஷா கேட்கிற ஒரு காட்சி போதும். இந்த படம் பல தேசிய விருதுகளை பெற தகுதியானது. குறிப்பாக விஜயசேதுபதி, த்ரிஷா, கௌரி ஆகியோரின் நடிப்பு.

இயக்குநர் தம்பி பிரேம்குமார் தஞ்சையில் பிறந்து, திருச்சியில் வளர்ந்த கலை இலக்கியம் வளர்த்த சோழமண்ணின் மைந்தன்.

பள்ளி, கல்லூரி காலத்தின் மறக்க முடியாத நண்பர்களோ, நபர்களோ , பசுமையான நினைவுகளோ எல்லோர் மனதிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீரும். என்றால் இந்த படம் ஒரு தென்றலாய் அவர்களின் நெஞ்சினை நினைவினை வருடிடும். ஒருநாள் தூக்கம் தொலைந்திடும். பல முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ந்திடும்.  காணத்துடித்த சில உயிர்களை காணுகின்ற ஆர்வம் மீண்டும் துளிர்த்திடும்.

வாழ்க்கை வெறும் பொருளால் ஆனதல்ல. மனிதர்களாலும் சில அற்புதமான உறவுகளாலும், உன்னதமான நினைவுகளாலும் ஆனது என்பதை உணர்த்திடும் திரைப்படம் ‘96. Hats off to Director Premkumar and his team. -திருச்சி சிவா’

திருச்சி சிவாவின் இந்த சினிமா விமர்சனத்திற்கு முதல் பதில் திமுக தலைமைக்கழக வழக்கறிஞரும், பேச்சாளருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘கொள்கை பரப்புச் செயலாளரின் 96 படத்தின் நடிகர் நடிகைகள் நல்ல எதிர்காலம் பற்றி தாங்கள் கருத்து வரவேற்புக்குறியது.

உங்களை நம்பி உள்ள பேச்சாளர்கள் எதிர்காலம் குறித்து ஒரு படம் பிடித்துக் காட்டுவது நல்லது. கருவிலிருந்தே கலைஞர் வாழ்க வாழ்க என்ற பேச்சாளர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வாய்ப்பு வாங்கி தராதது வருத்தம் அளிக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து நடைபெறும் புகழஞ்சலி நிகழ்ச்சிகளில் கட்சிப் பேச்சாளர்களை தவிர்த்துவிட்டு பொதுவான நபர்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் திமுக பேச்சாளர்கள் வருமானம் இன்றியும், வாய்ப்புகள் இன்றியும் திணறுவதையே சூர்யா வெற்றிகொண்டான் இப்படி குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.

சூர்யா வெற்றிகொண்டானின் முகநூல் பக்கத்தில் திமுக பேச்சாளர்கள் பலரும் இவரது இந்தக் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். செங்கை தாமஸ் என்பவர், ‘புகழ் அஞ்சலி செலுத்த புகழ் வெளிச்சம் தேவை. குறைந்த பட்சம் சின்னத்திரை நடிகர் நடிகையாய் இருத்தல் வேண்டும் என்ற சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர்.. கொள்கைபரப்புச் செயலாளரை குறைகூறிப் பயனில்லை...! புகழ் அஞ்சலியை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

என் போன்ற உண்மை விசுவாசிகள். கழகக் கூட்ட அறிவிப்புகளில் தகுதியுள்ளோர் புறக்கணிக்கப்படுவதை தங்களைப் போன்றவர்

சுட்டிக்காட்ட முன்வந்தால் நலம். 96 பட விமர்சனம் ஆரோக்கியம்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்கை பிரபாகரன் என்கிற பேச்சாளர், ‘நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என குறிப்பிட்டிருக்கிறார். கலைமணி இளையபாரதி, ‘உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி அண்ணா’ என கூறியிருக்கிறார். சின்னமனூர் புகழேந்தி, ‘அருமையான பதிவு அண்ணா’ என பதிவு செய்திருக்கிறார். கோவை அ.திராவிட மணி, ‘ஆரோக்கியமான வருத்தம்’ என குறிப்பிட்டார்.

திருச்சி சிவா தரப்போ, ‘கட்சித் தலைமை எடுத்த முடிவு அடிப்படையில்தான் கட்சி சாரா பேச்சாளர்கள் கலைஞர் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். எனவே கழகப் பேச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததில் திருச்சி சிவாவின் பங்கு எதுவும் கிடையாது’ என்கிறார்கள்.

காதல் காவியமான 96, திமுக.வில் சலசலப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.

 

#Tamil Cinema #Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment