ஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம்? அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்

ஹெச் ராஜா எதிர்ப்பால் திருச்சி கல்லூரியில் கருத்தரங்கம் ரத்து ஆனதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

ஹெச் ராஜா, மாஃபாய் பாண்டியராஜன் எதிர்ப்பால் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ஒரு கருத்தரங்கம் ரத்து ஆனதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

‘கருத்துச் சுதந்திரத்தின் மீது, குறிப்பாக முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான கருத்து வெளிப்பாடுகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான், திருச்சியில் ஒரு கல்லூரியின் சர்வதேசக் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணியைச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் டிசம்பர் 6, 7 தேதிகளில் நடைபெற இருந்த கருத்தரங்கில், ‘தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள்’ என்ற தலைப்பிலும் ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆய்வு நோக்கத்துடன் கம்பராமாயணம், வில்லிபாரதம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நூல்களில் உள்ள பதிவுகள் பற்றிய உரைகள் இடம்பெற இருந்தன.

பாஜக தேசியச் செயலர் எச். ராஜா தனது ட்விட்டர் தளத்தில், இது தமிழ் மொழியையும் இந்துயிசத்தையும் இழிவுபடுத்துவதற்கு கிறிஸ்துவ மிஷனரிகளும் அர்பன் நக்ஸல்களும் செய்கிற முயற்சி என்பதாகப் பதிவிட்டிருக்கிறார். இதை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஆய்வுரைகளைக் கேட்பதற்கு மட்டுமல்ல, அவற்றை விமர்சிப்பதற்குமான உரிமையும் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ராஜா இதை எதிர்கொள்ளவிருப்பதாகக் கூறியது விமர்சிப்போம் என்ற பொருளிலா அல்லது இதை நடத்தவிட மாட்டோம் என்ற பொருளிலா?

இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இத்தகைய, கல்வித்துறை சார்ந்த, பண்பாட்டுத்தள ஆய்வுகள் தடையின்றி நடப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கு மாறாக, “இத்தகைய இழிவான நிகழ்வுகள் நடைபெறுவதை அரசு அனுமதிக்காது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ராஜா இவ்வாறு பதிவிட்டதில் வியப்பில்லை, ஆனால் அமைச்சரின் எதிர்வினை கூடுதல் கவலைக் குரியதாக இருக்கிறது.

இலக்கியப் பதிவுகள் அந்தந்தக் காலகட்டத்தின் சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பவையே. இன்றளவும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தொடரும் நிலையில், ஆய்வாளர்களின் முயற்சியால் கடந்தகாலத் தொடர்ச்சிகள் பற்றிய உண்மைகள் மக்களுக்குத் தெரியவருவது ஆரோக்கியமான மாற்றங்களுக்கே இட்டுச் செல்லும்.

இந்தத் தலைப்பில் ஆய்வாளர்கள் தரவுகளை சேகரிக்க முடிந்திருக்கிறது என்றால், தமிழ் இலக்கியங்களில் அத்தகைய வன்முறைகள் நடந்திருப்பதற்கான பதிவுகள் இருக்கின்றன என்றுதான் பொருள். பெண்களைப் போற்றுகிற எத்தனையோ பதிவுகள் இருக்க, தமிழ் இலக்கியம் பெண்களை இழிவுபடுத்தியது என்ற சிந்தனையை விதைக்க அனுமதிக்கப்படக் கூடாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

எல்லாம் போற்றுதலுக்குரிய வகையிலேயே இருந்தன என்ற கற்பனையில் மூழ்குவதும், உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதும் சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலே. மதத்தின் பெயரால் பிரச்சனை கிளப்புவதும், அதற்கு அரசு உடன்பட்டுப்போவதும் குறிப்பாகப் பெண்ணுரிமைக்கும் பாலின சமத்துவத்துக்கும் எதிரான ஆணாதிக்கக் கருத்தியலே.

கருத்தரங்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதில் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான பகையுணர்வை விசிறிவிடும் உத்தியும் இருக்கிறது. கஜா புயல் நிவாரணப்பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுதான் உண்மை என்றால், கருத்தரங்கிற்கான அடுத்த தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும், அதில் இந்த ஆய்வுரைகள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், மதவெறிக் கண்ணோட்டத்துடனும் ஆணாதிக்க ஆணவத்தோடும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் வெற்றிபெற்றிருக்கிறது என்றே கருத வேண்டும்.
தமிழ் இலக்கிய அமைப்புகள் மட்டுமல்லாமல், மக்கள் நல்லிணக்கத்தையும் பாலின சமத்துவத்தையும் முன்னிறுத்துகிற இயக்கங்களும், கல்விக் களத்தில் ஊடுருவும் இந்தக் கருத்தியல் வன்முறைக்கு ஒருமித்த குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டுமாய் தமுஎகச கோருகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close