தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் என்பது கடந்த 20ஆம் தேதி தொடங்கி, 27- ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது.
திருச்சியில் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தத்தம் வேட்பு மனுக்களை இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் தாக்கல் செய்தனர்.
திருச்சி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில்நாதன் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முறைப்படி, தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் போட்டியிட இன்று தனது வேட்பு மனுவை செந்தில்நாதன் தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனு தாக்கலின் போது முன்னாள் மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், தமிழ் மாநில காங்கிரஸ் குணா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஒன்று கூடினார். பின்னர் ராஜேஷ், ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலத்தில் சாட்டை முருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
திருச்சி அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா கட்சியின் முக்கிய நிர்வாகிகளான தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், மாநகர செயலாளர் சீனிவாசன் , கழக அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி , மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்னர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி ப. குமார் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இன்று கலை முதல் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நிகழ்வால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திக்கு முக்காடியது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“