Advertisment

ரூ.43 கோடி மதிப்பில் கட்டப்படும் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா; 2-வது அலகு திறப்பு எப்போது?

திருச்சி மாவட்டம், நவல்பட்டு எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 2-வது அலகு திறப்பது எப்போது?

author-image
WebDesk
New Update
ELCOTT

ரூ.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 2-வது அலகு திறப்பு எப்போது? காத்திருக்கும் பட்டதாரிகள்

ரூ.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 2-வது அலகு திறப்பு எப்போது? காத்திருக்கும் பட்டதாரிகள் கேள்வி.

Advertisment

திருச்சி மாவட்டம், நவல்பட்டு எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 2-வது அலகின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு;

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் நவல்பட்டு ஊராட்சியில் எல்காட் நிறுவனத்துக்கு சொந்தமான தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் 147.61 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2007-ல் அறிவிக்கப்பட்ட இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் 12.2.2008 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதில் எல்காட் நிறுவனம் 6.83 ஏக்கர் பரப்பளவு நிலத்தை வைத்துக் கொண்டு மீதி இடங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு 99 வருடம் ஒப்பந்த அடிப்படையில் தொழில் தொடங்க ஏக்கர் ரூ.33.78 லட்சம் விலையில் வழங்க அறிவிப்பு வெளியிட்டது. 

இதன்படி, கடந்த 15 ஆண்டுகளில் 2 தனியார் நிறுவனங்கள் மட்டுமே 5 ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளன. 130 ஏக்கர் பரப்பளவு நிலம் காலியாக உள்ளது.

அதேசமயம், எல்காட் நிறுவனம் தனக்குச் சொந்தமான 6.83 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டிடங்கள் கட்டி சிறிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சதுர அடி ரூ.20-க்கு மாத வாடகைக்கு வழங்கி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில் 7 நிறுவனங்கள் வாடகைக்கு இடம் பிடித்து 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றன.

2014-க்குப் பிறகு அங்கு இடமின்மையால் வாடகைக்கு இடம் கேட்கும் தனியார் நிறுவனங்கள் வேறு ஊர்களுக்கு தொழில் தொடங்கச் சென்றுவிட்டன. இதையடுத்து முதல் யூனிட் அருகிலேயே தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் 1.16 லட்சம் சதுர அடி பரப்பளவில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் 2-வது அலகு கட்டுவதற்கு எல்காட் நிறுவனம் முடிவு செய்தது.

நவல்பட்டு எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் (சாலையின் இருமருங்கிலும்) புதர் நிறைந்து காணப்படுகின்றன.

இதன் கட்டுமானப் பணிகள் 2020-ல் தமிழக அரசின் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. 2022 செப்டம்பரில் கட்டுமானப் பணிகளை முடித்து 2-வது அலகை திறப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட தேதியைக் கடந்து ஓராண்டு ஆகியும் இன்னமும் கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. கொரோனா காரணமாக கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை கட்டுமானப் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: சிவில் பணிகள் ரூ.33 கோடி மதிப்பிலும், மின்சாரப் பணிகள் ரூ.10 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் 2-ம் அலகு கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. சாலை வசதி, கட்டிடத்தின் முகப்பு அலங்காரம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வாகன நிறுத்துமிடம், மின்சார பணிகள் என சில பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. அநேகமாக அடுத்த மாதம் கட்டுமானப் பணிகளை முடித்து எல்காட் நிறுவனத்திடம் கட்டிடத்தை ஒப்படைத்துவிடுவோம் என்றனர்.

கொரோனாவுக்குப் பின் திருச்சி போன்ற 2-ம் நிலை நகரங்களுக்கு சிறிய அளவிலான நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆர்வத்துடன் வருகின்றன. ஆனால், நவல்பட்டு எல்காட் வளாகத்தில் இடம் கிடைக்காததால் வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன. இதனால் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு பறிபோகிறது.

எனவே, திருச்சி எல்காட் 2-ம் அலகு கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து திருச்சி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருச்சி எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பிரபலமான தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சொந்தமாக இடம் வாங்கி தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment