தமிழ்நாடு முழுவதும் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு அரசு மானிய விலையில் நிலம் வழங்கி வருகின்றது. அந்த வகையில், திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணை அருகே 2400 சதுர அடி நிலம் அரசு மான்ய விலையில் வழங்கப்பட்டது. திருச்சியில் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வந்த 57 பேருக்கு தலா நிலத்தின் மதிப்பீட்டு தொகையாக ரூ.92,769 வீதம் 57 பேருக்கும் சேர்த்து, மொத்தம் ரூ.52 லட்சத்து 87 ஆயிரத்து 833 தமிழ்நாடு அரசுக்கு செலுத்தி பட்டா பெற்றனர்.
பின்னர், அந்த இடம் நீர்நிலை என்பதால் அதை ஒப்படைக்குமாறும், அதற்கு இணையான இடம் வழங்கப்படும் என்றும் அப்போதைய ஆட்சியர் ராசாமணி கூறினார். அவரது உறுதிமொழியின் அடிப்படையில் திருச்சி பத்திரிகையாளர்கள் சம்மந்தப்பட்ட இடத்தை ஒப்படைத்தனர். ஆனால் இன்று வரை மாற்று இடமோ, நிலத்தின் மதிப்பீட்டு தொகையோ பத்திரிகைாயாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, பணம் கொடுத்து நிலம் வாங்கி ஒப்படைத்த பத்திரிகையாளர்களில் 8 பேர் காலமாகிவிட்டனர். அவர்களது குடும்பம் வறுமையான நிலையில் உள்ளது. அவர்களுக்கு நிலத்தையோ, அல்லது அதற்கான மதிப்பீட்டு தொகையையோ மாவட்ட நிர்வாகம் கொடுத்து உதவினால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இது தொடர்பாக அவர்கள் பலமுறை அடுத்தடுத்து வந்த ஆட்சியர்களிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. வழக்கமாக பொதுமக்கள் பிரச்னைக்கு குரல் கொடுத்து அவர்களுக்கு ஒரு புதிய விடியலை தேடித்தருபவர்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் இன்று இறந்துபோன பத்திரிகையாளர்கள் 8 பேரின் குடும்பத்தினரான திருச்சி காஜப்பேட்டை பாலக்கரை பகுதியை சேர்ந்த சுபா(மாலைமுரசு முன்னாள் புகைப்பட கலைஞர் தர்மராஜின் மனைவி), விசாலாட்சி சமுத்திரராஜன், (தினமணி முன்னாள் நிருபர் சமுத்திரராஜனின் மனைவி), சுப்புலட்சுமி மகாராஜன் (தினகரன், முன்னாள் போட்டோகிராபர் மகாராஜனின் மனைவி), இந்திராணி சந்திரசேகரன் (தினகரன் முன்னாள் போட்டோகிராபர் சந்திரசேகரனின் மனைவி), கார்த்திக்ராஜா, சித்தார்த்தன் (தினபூமி, முன்னாள் நிருபர் சித்தார்த்தனின் மகன்), பொற்செல்வி ஜெயப்பிரகாசம் (தினகரன், முன்னாள் நிருபர் ஜெயப்பிரகாசத்தின் மனைவி) ஆகியோர் கண்ணீர் மல்க மனு ஒன்றை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் அளித்தனர்.
அதில் கணவன் மற்றும் தந்தையை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் எங்களையும், எங்கள் குழந்தைகளின் நிலையையும் அரசு கருத்தில் கொண்டு மாற்று இடம் அல்லது ஒதுக்கப்பட்ட இடத்திற்கான மதிப்பு தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக, ஆளுங்கட்சி அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் என பல கட்ட பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் இன்றைய நிலை வரை எட்டாத நிலையில், அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஆட்சி செய்தபோது கொடுக்கப்பட்ட இடத்திற்கு மாற்று இடத்தை அவரது மகன் மு.க. ஸ்டாலின் முதல்வராக ஆட்சி செய்யும் இந்த காலகட்டத்திலாவது கொடுக்க மாட்டார்களா என்ற அந்தோ பரிதாபத்தில் திருச்சி பத்திரிக்கையாளர்களின் குடும்ப நிலை வேதனைக்கு உரியதாக அமைந்துள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.