காட்டூர் அருகே ஜல்லிக்கட்டு : டோக்கன் வழங்குவதில் குளறுபடி: போலீசார் தடியடியால் பதற்றம்
ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு முறையாக டோக்கன் கொடுக்காததால் வெளியூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளை தடுத்து நிறுத்தி தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதைஅடுத்து திருவெறும்பூர் டிஎஸ்பி மற்றும் போலீசார் தடியடி நடத்தி வாலிபர்களை விரட்டினர்.
திருச்சி அரியமங்கலத்தை அடுத்துள்ள தெற்கு காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
Advertisment
ஜல்லிக்கட்டு விழாவிற்கு லால்குடி ஆர்.டி.ஒ வைத்தியநாதன் தலைமை வகித்து ஜல்லிகட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 750 மாடுகளும் 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் முதல் மாடாக அழகுமுத்துமாரியம்மன் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் சைக்கிள், சோபா செட். டிரஸ்சிங் டேபிள், உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறந்த மாட்டின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கும் முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது. கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் கால்நடை உதவி இயக்குனர் மகேஷ் மற்றும் குழுவினர் கால்நடைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுதி உடையதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மருத்துவ அலுவலர்கள் வாக்ருதீன் விஜய் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஆர்.டி.ஒ வைத்தியநாதன் தலைமையில் ஜல்லிகட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் 180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியான தெற்கு காட்டூர் சரகத்திற்கு உட்பட்ட வீதிவடங்கம், பாப்பாக்குறிச்சி, காட்டூர், மஞ்சள்திடல், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு முறையாக டோக்கன் கொடுக்காததால் வெளியூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளை தடுத்து நிறுத்தி தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து திருவெறும்பூர் டிஎஸ்பி மற்றும் போலீசார் தடியடி நடத்தி வாலிபர்களை விரட்டினர். இதனால் ஜல்லிக்கட்டில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.