Advertisment

முந்தும் அ.தி.மு.க; போராடும் தி.மு.க கூட்டணி: திருச்சியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மகன் என்ற ஒரே ப்ளஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைக் கொண்டு துரை வைகோ பிரச்சாரத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்.

author-image
WebDesk
New Update
Tiruchirappalli Lok Sabha constituency ADMK DMK MDMK AMMK NTK Tamil News

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களைப்பொறுத்தவரை, அ.தி.மு.க தற்போது பிரச்சாரத்திலும், பிற கவனிப்புகளிலும் முந்தியிருக்கின்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

 Lok Sabha polls 2024 | Trichy: நாட்டின் 18-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தமிழகத்தின் மையப்பகுதியாகவும் சென்னை, கோவை மாநகரங்களுக்கு இணையாக வளர்ந்த நகரம் திருச்சி. திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகள் திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டு இருப்பது திருச்சி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி. இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,44,742 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 7,52,953, பெண் வாக்காளர்கள் 7,91,548, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 241 பேர் இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.

இந்தத் தொகுதியில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற அடையாளம் மட்டுமின்றி பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த அடைக்கலராஜ் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி இது. அதேபோல், பா.ஜ.க-வைச் சேர்ந்த மறைந்த மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலம் இரண்டு முறை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க ஒரு முறையும், ம.தி.மு.க ஒருமுறையும் வென்றிருக்கின்றது. அ.தி.மு.க 2 முறை வென்றுள்ளது. 

பெருமளவு நகர் புறப்பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் பொன்மலை ரயில்வே பணிமனை, பாரத மிகுமின் நிறுவனம், துப்பாக்கித்தொழிற்சாலை  உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. தொழிலாளர்கள் கணிசமாக உள்ள தொகுதி என்பதால் நீண்டகாலமாகவே இடதுசாரி கட்சிகள் இங்குப் போட்டியிட்டு வென்றுள்ளன.

திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகியவற்றுக்கும் சற்று வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. இதனால் பல தேர்தல்களில் இந்தத் தொகுதி கூட்டணியில் உள்ள தேசியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. 
   
அரசியல் கட்சிகளுக்கு திருச்சி திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கை காலந்தொட்டு கடைபிடிக்கப்படுவதால், திருச்சியில் இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதல் பிரச்சாரத்தை தி.மு.க, அ.தி.மு.க-வினர் மேற்கொண்டனர். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முத்தரையர், கள்ளர், வெள்ளாளர், முக்குலத்தோர், ஆதிதிராவிடர் சமூகத்தினரும், நாயுடு, செட்டியார், நாடார், யாதவர், ரெட்டியார், வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினரும் உள்ளனர். பெரும்பான்மையான இந்துக்கள் உள்ளதை போல கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர். பல தரப்பட்ட மக்களை கொண்டது திருச்சி நாடாளுமன்ற தொகுதி என்பதால், திருச்சி தொகுதியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வட்டாரத்திற்குள் அடக்கிவிட முடியாது. 

இந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கருப்பையா, பா.ஜனதா கட்சி கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான ப.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்தாலும், பல தீர்க்கப்படாத பிரச்சினைகளும் உள்ளன. திருவெறும்பூரில் இயங்கும் பெல் தொழிற்சாலையை சார்ந்து உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் திருவெறும்பூர், துவாக்குடி, அரியமங்கலம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்ற நிலையில், பெல் தொழிற்சாலைக்கு ஆர்டர்கள் மிகவும் குறைந்ததால், சிறுகுறு மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. இதனால், பெல் தொழிற்சாலையை நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான நிலையில், சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது.  பொன்மலை ரயில்வே பணிமனையில் திருச்சி தொகுதியை சார்ந்த இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு கோரும் பிரச்சனையும், ஏற்கனவே அப்ரண்டீஸ் முடித்த இளைஞர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாமல் வடநாட்டவர்களுக்கு பணி வாய்ப்பு என்ற நிலை நீடிப்பதால் தொடர் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காதது அதிருப்தியே.

அதேபோல் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை தொகுதிகளை மறுசீரமைப்பின் மூலம் திருச்சி தொகுதியோடு இணைத்ததற்கு அப்பகுதியினரின் எதிர்ப்புகள் இன்னும் தொடர்கிறது. முந்திரி வர்த்தகம் நிறைந்த மேற்கண்ட பகுதிகளில் இதுவரை முந்திரி ஏற்றுமதிக்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், போதிய கட்டமைப்பை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பிரதானம். தஞ்சை-புதுக்கோட்டை ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானமாக இருக்கின்றது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களைப்பொறுத்தவரை, அ.தி.மு.க தற்போது பிரச்சாரத்திலும், பிற கவனிப்புகளிலும் முந்தியிருக்கின்றது. அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் பரிச்சயமானவர் என்பதாலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரின் ஆதரவாலும், மக்களுக்கு பரிச்சயமான இரட்டை இலை சின்னம் மூலம் தொகுதியில் முந்திக்கொண்டிருக்கின்றார். மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் என்பதாலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளவர் என்ற ப்ளஸ் பாயிண்ட்டோடு அ.தி.மு.க.வினர் மீண்டும் திருச்சி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். கருப்பையாவின் சொந்த மண்ணில் சொந்தப் பிரச்சனையினால் சிறிது சரிவும் காணப்படுகின்றது.

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மகன் என்ற ஒரே ப்ளஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைக் கொண்டு துரை வைகோ பிரச்சாரத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போதே தி.மு.கவினரின் அதிருப்திகளை நிறைய பெற்றார். எக்காரணம் கொண்டும் தி.மு.க சின்னத்தில் நிற்க மாட்டேன், தனிச்சின்னத்தில் தான் நிற்பேன் என அழுது புலம்பியதால் தி.மு.க-வினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. 

இருப்பினும், தொகுதியின் 2 அமைச்சர்களான அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துரை வைகோவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியின் மாநகர், புறநகர் பகுதிகளில் மதிமுகவுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருப்பதாலும், கூட்டணிக் கட்சி பலத்தை நம்பியும், நட்சத்திர பேச்சாளர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்களின் பிரச்சாரத்தில் கொஞ்சம் தெம்பாக சுயேட்சை சின்னத்தில் களத்தில் சுனக்கத்தோடு முன்னேறிக்கொண்டிருக்கின்றார்.

அதேபோல், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க சார்பில் ஏற்கனவே பரிட்சயமான குக்கர் சின்னத்தில் போட்டியிடும் திருச்சி மண்ணுக்கு சொந்தக்காரர் செந்தில்நாதன் மாநகர மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர். கவுன்சிலராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோதே பொதுமக்கள் பிரச்சனைக்காக களமிறங்கி செயல்பட்டவர். மாநகராட்சி மன்றத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த ஒரே நபர் செந்தில்நாதன் என்பதால் திருச்சி மாநகரில் கணிசமான வாக்குகளை பெறுவார். பா.ஜ.க கூட்டணி பலம், டி.டி.வி-யின் ஆதரவு மட்டுமே ப்ளஸ் என்றாலும் தொகுதியில் பண பலம் இல்லாமல் பின் தங்கி வருகின்றார்.

திருச்சி தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஜல்லிக்கட்டு ராஜேஷ் தொகுதி முழுவதும் பல்வேறு ஜல்லிக்கட்டு போராட்டங்களால் பரிட்சயமானவர். இளைஞர்கள் மத்தியில் நல்ல நெருக்கம் கொண்டவர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர், சீமான் பிரச்சார பலம் என்ற ஒற்றை பலத்துடன் களத்தில் இறங்கி சுழன்றுக்கொண்டிருக்கின்றார். பண பலம் முழுமை பெறாத நிலையிலும் மாற்றத்தை விரும்பும் மக்களின் பலத்தோடு தொகுதி முழுக்க வலம் வந்துக்கொண்டிருக்கின்றார் ஜல்லிக்கட்டு ராஜேஷ்.

திருச்சியை பொறுத்தவரை, எந்த நபர் என்றும், எந்த சாதி என்றும் பார்க்காதவர்களாகவே இருந்ததால் இதுவரை யார் வந்தாலும் கூட்டணி பலத்தால் வென்றவர்களே அதிகமாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க -தி.மு.க-வுக்கு இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. முன்னாள் ஆளுமைகளின் பலம், விட்டமின் "ப" பலத்தால் அ.தி.மு.க-வை சேர்ந்த கருப்பையா தற்போது முந்திக்கொண்டிருக்கின்றார்.

கூட்டணி பலம், தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் பலம்  துரை வைகோவுக்கு இருந்தாலும், காங்கிரஸ் கோஷ்டி பூசல் கொஞ்சம் வாக்குகளை சிதறடிக்கும் நிலையில் கடும் போராட்டங்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றார் துரை வைகோ.

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக அதுவும் பிரதான கூட்டணியில், திருச்சி தொகுதியில் பிறந்து வளர்ந்த உள்ளூர் வேட்பாளராக அ.ம.மு.க வேட்பாளர் செந்தில் நாதன் களத்தில் இருப்பதால் மாநகரில் கணிசமான வாக்குகளை பிரிக்க வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Dmk Admk Trichy Ntk Mdmk Ammk Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment