/indian-express-tamil/media/media_files/Xj8SOwK4s0se74pQdvV6.jpg)
திருச்சியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருச்சியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்று பெரும்பாலான பெரிய கட்சிகள் தத்தம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
அந்த வகையில், திருச்சி திமுக கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உறுதிமொழி வாசித்தபோது 'ஆண்டவன் மீது ஆணையாக' என்று துரை வைகோ உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவருடன் தி.மு.க மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு வெளியே வந்த வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நான் மறந்து விட்டேன். எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான். அதை நோக்கி தான் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. அமைச்சர் நேரு அவரது மகன் அருண் நேருவை போலவே என்னையும் ஒரு மகனாக நினைக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் வரை வந்து என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நேற்று நடந்த சம்பவம் குறித்து வைகோவிடம் எதுவும் நான் பேசவில்லை.
தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்கவில்லை. இதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். நாளைக்குள் உரிய முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பா.ஜ.க.வின் கைப்பவாயாக செயல்படும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்றே தேர்தல் ஆணையமும் ஜனநாயக படுகொலையை பா.ஜ.க-வுக்கு ஆதரவாக நடத்திக் கொண்டிருக்கிறது என்றார்.
முன்னதாக, திருச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை திருச்சி - தஞ்சை திருமண்டலப் பேராயர் பேரருள் முனைவர் த. சந்திரசேகரன் என்பவரிடம் அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரித்தார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us