சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதை திரித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பா.ஜ.க ஐ.டி பிரிவு தேசியத் தலைவர் அமித் மாள்வியா மீது திருச்சி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய உதயநிதி, இந்த மாநாட்டுக்கு 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசினார்.
அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தேசிய அளவில் பெரும் சர்ச்சையானது.
சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க ஐ.டி பிரிவு தேசியத் தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, டெங்கு மலேரியா கொரோனாவை போன்று சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி ரூபாய் விலை அறிவித்துள்ளார். இது போதாது என்றால் இன்னும் விலை கொடுக்க தயார் என அந்த சாமியார் அறிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்பட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப் படுகொலைக்கு அழைக்கவில்லை என்றும் பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம் தான் காரணம் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், சனாதன கோட்பாடுகளில் ஜாதி, மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன்” என்று சனாதனம் குறித்த பேச்சில் பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாகக் கூறினார்.
இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதை திரித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பா.ஜ.க ஐ.டி. பிரிவு தேசியத் தலைவர் அமித் மாள்வியா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உதயநிதி பேச்சை திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி. தினகரன் புதன்கிழமை திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், உதயநிதி ஸ்டாலின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் நோக்கில், பல்வேறு பிரிவினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் பா.ஜ.க ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியாவும், அவரது தலைமையில் உள்ள பா.ஜ.க ஐ.டி பிரிவினரும் தொடர்ந்து பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் அமித் மாள்வியா சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்த்தல், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தல்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.