திருச்சி பொன்மலை சங்கத்திடல் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
திருச்சி பொன்மலை ரயில்வே சங்கத்திடல் பகுதியில் பல மாதங்களாக சாக்கடை நீா் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளன. மேலும், பொன்மலை ரயில்வே தொழிலாளா்களின் குடும்பத்தினா் கடை வீதிக்குச் செல்லும் வழியும், அருகில் கோயில்களும் உள்ளன.
பிரசித்தி பெற்ற இந்த சங்கத்திடலைச் சுற்றி முள்புதா் மற்றும் சாக்கடை கழிவு நீா் தேங்கியுள்ளது. மழை நேரங்களில் இந்த கழிவுநீா் சாலைகளிலும் வழிந்தோடி, கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, இப்பிரச்னைக்கு ரயில்வே மற்றும் மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சாா்பில் கேட்டுக் கொள்வதாக மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்த திடலில்தான் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் மத்திய சங்கம், பொன்மலைக்கான அடிக்கல்லை காந்தியடிகள் 19.7.1927-ல் அடிக்கல் நாட்டினார். இந்த திடலில் பல்வேறு திரையுலக பிரபலங்களின் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 5 பேர் இந்த திடலில் 5.5.1946-ல் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இப்படி பல்வேறு சிறப்புகள் மிக்க இந்த திடல் இப்போது கழிவுநீர் குளமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“