திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாகவும், வரலாற்று பெருமை மிக்க ஒன்றாகவும் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது. இந்தப் பிள்ளையார் கோயிலுக்கென ஒரு தெப்பகுளம் மலைக்கோட்டை வாசல் அருகே உள்ளது. இந்தக்குளத்தைச்சுற்றியுள்ள 3 வீதிகளான என்.எஸ்.பி.ரோடு, தெப்பகுளம், நந்திகோவில் தெரு உள்ளிட்ட இந்த பகுதிகளை சுற்றி முக்கியமான ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக மலைக்கோட்டை பகுதியை சுற்றிலும் தரைக்கடை வியாபாரமும் களைகட்டியிருக்கின்றது.
/indian-express-tamil/media/media_files/ebOf99tu7cmWnRXvSp5L.jpeg)
இந்தப் பகுதி தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய மிக முக்கிய ஆன்மிக, சுற்றுலா, வர்த்தகப் பகுதியாக உள்ளது. இந்த மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் மீன்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. விழாக்காலங்களில் இங்கே தெப்போற்சவமும் உற்சாகமாக நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், இந்தக் குளத்தின் சுற்றுச்சுவரை சுற்றி தரைக்கடை வைத்திருப்பவர்கள் தாங்கள் கொண்டுவரும் திண்பன்டங்கள் மற்றும் கழிவுகளை தெப்பக்குளத்தில் வீசுவதால் தண்ணீர் மாசுபடுகின்றது. அதேபோல் தெப்பக்குளத்தை சுற்றி இருக்கக்கூடிய ஹோட்டல்களில் உள்ள கழிவுகளும் இரவு நேரங்களில் தெப்பக்குளத்தில் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபட்டு புனித தன்மை கெட்டு விடுகிறது. இதனால் குளத்தில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது தொடர்கின்றது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
/indian-express-tamil/media/media_files/Anq2bTkfDUTkt0mz1MKJ.jpeg)
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் அய்யாரப்பன் தெரிவிக்கையில்; மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இந்த தெப்பக்குளம் புனிதமானது. இங்கே குளித்து தாயுமானவரை தரிசிக்க ஆன்மிகவாதிகள் திரள்வர். ஆனால் இந்த தெப்பக்குளத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி கிடையாது. விழாக்காலங்களில் தெப்போற்சவம் மற்றும் தீர்த்தவாரி வைபவங்கள் மட்டும் இந்தக்குளத்தில் நடக்கும்.
இந்தத் தெப்பக்குளத்தை சுற்றி காய்கறி, துணிக்கடைகள் என 100-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் மற்றும் பெரிய பெரிய ஹோட்டல்கள், பழக்கடைகள், துணிக்கடைகள் இருக்கின்றன. இந்தக் குளத்தினை சுற்றியுள்ள தரைக்கடை வைத்திருப்போர் தத்தம் கழிவுகளை தெப்பக்குளத்திற்குள் கொட்டுவதால் மீன்கள் செத்துமடிந்து அங்கே சுகாதாரச்சீர்கேடு அரங்கேறுகிறது.
/indian-express-tamil/media/media_files/XoXxvS7uiHtayUBqPlMI.jpeg)
இந்தக்குளத்தை புனிதநீராக கருதி படித்துறையில் பலர் இறங்கி தண்ணீரை தலையில் தெளிப்பதும், வீட்டிற்கு எடுத்துச்செல்வதுமாக இருக்கும் நிலையில், தெப்பக்குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீர் கெட்டுப்போய் பொதுமக்களுக்கு இதனால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகின்றது.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் மூன்று முறை இதுபோல் மீன்கள் உயிரிழந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மீன்கள் பிடிக்கப்பட்டது. திருக்கோயில் நிர்வாகம், மாநகராட்சி சார்பில் தெப்பக்குளத்து தண்ணீர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் கிடப்பில் போடப்பட்டது.
தற்போதும், முறையாக பராமரிக்காததால் பாதாள சாக்கடை நீர், அருகில் ஓடும் சாக்கடை கால்வாய் நேரடியாக தெப்பக்குளத்தில் கலக்கப்படுகிறது. இதனால் நீர் முழுவதும் மாசுபட்டு அங்கு இருக்கக்கூடிய மீன்கள் அனைத்தும் செத்து மடிகின்றன. அது மட்டும் இல்லாமல் தண்ணீரில் இருந்து துர்நாற்றமும் வீசுகிறது.
தெப்பக்குளம் சாக்கடையாக மாறும் நிலையை கண்டுகொள்ளாமலும், தடுக்காமலும், அறநிலையத்துறையினரும், மாநகராட்சி நிர்வாகமும் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏற்கனவே திருச்சி மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வாய்க்காலாக உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் சாக்கடையாக மாறி வரும் நிலையில், அறநிலைத்துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோட்டை தெப்பக்குளம் சாக்கடையாக மாறுவதை கண்டு சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் மிகுந்த மன வேதனை அடைகின்றனர்.
தமிழகத்தின் நம்பர் ஒன் மாநகராட்சி ஆக தேர்வு செய்யப்பட்டு, திருச்சியின் அடையாளமாக இருக்கக்கூடிய மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை தடுக்காமலும், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமலும் இருப்பது ஏன்? என்ற கேள்விகள் திருச்சி வாழ் மக்களிடத்திலிருந்தும் எழுந்திருக்கின்றன.
செய்தி: க. சண்முகவடிவேல்