/indian-express-tamil/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-15-23-35.jpeg)
Trichy
திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இரண்டு துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர், பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பிரபு (32) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ரவி (38) ஆகிய இருவரும் நேற்று புதைசாக்கடைக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்:
இந்த கொடூரமான சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகரக்குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். "மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-ன் படி மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்வது குற்றமாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், திருச்சி மாநகராட்சி, ஒப்பந்ததாரர் மூலம் துப்புரவுத் தொழிலாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாதாள சாக்கடைக்குள் இறக்கி பணி செய்ய வைத்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று அவர்கள் கூறினர்.
கோரிக்கைகள்:
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
2023 உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.
அவர்களின் குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தால், அவர்களின் முழுமையான படிப்பு செலவையும் அரசே ஏற்று, படிப்பு முடிந்ததும் அரசு வேலை வழங்க வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபடச் செய்த ஒப்பந்ததாரரை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர்களான லெனின், கார்த்தி, மாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பாதாள சாக்கடை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.