ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்ததை கண்டித்து திருமால் அடியார்கள் குழாம் சார்பில் இன்று காலை பஜனை பாடி, ஜால்ரா அடித்து போராட்டம் நடத்தினர்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோகத்தின் வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் கலை கட்டும். இக்கோயிலில் மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன.
இந்நிலையில், ஶ்ரீரங்கம் கோயிலின் உள்ளே கொடிமரம் முன்பு ஸ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் குழாம் சார்பில் அடியார் குழாமின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்தும், ஜால்ரா அடித்தும், பஜனை பாடியும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கொடிமரம் முன்பு இருந்த அனுமன் சிலையை நான்கு அடி தூரம் நகர்த்தி வைத்துள்ளனர். அந்த சிலை 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் அதனை நகர்த்தி வைத்துள்ளதை, மீண்டும் அதே இடத்தில் அனுமன் சிலையை வைக்க வேண்டும்.
மேலும், ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி மூலவர் திருவடியை பராமரிப்பு என்ற பெயரில் சிதிலம் அடையச் செய்துள்ளனர். அதனை பழையபடி சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஸ்ரீராமானுஜர் திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என்றனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆரியபட்டால் வாசலில் உள்ள தங்கக் கொடிமரம் முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து, பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்ரீரங்கம் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது.
திருச்சியில் உள்ள இரு பெரும் பழமை வாய்ந்த கோவில்களில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“